3743.

     தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
          தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
     தெரிந்திடல் அனைத்தும் தெரிந்திடல் வேண்டும்
          தெரிந்திடாய் எனில்இடர் எனைத்தான்
     எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
          எய்துகேன் யார்துணை என்பேன்
     திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
          திருவுளம் தெரிந்தது தானே.

உரை:

     உலகியல் துன்பங்களை நான் தாங்க மாட்டேன்; சிறிதும் தாங்க மாட்டேன்; எனது மனச் சேர்வையும் துன்பத்தையும் போக்கித் திருவருள் ஞான நெறியைத் தெரிவித்தல் வேண்டும்; நெறி வகைகள் அனைத்தையும் குறையாமல் தெரிவித்தல் வேண்டும்; தெரியாயாயின் என்னைத் துன்ப வகைகள் போந்து எரித்து வருத்தும்; ஆதலால் நான் யாது செய்வேன்; எங்கே சென்று யாவரைத் துணை யென்று கொள்வேன்; இவ்வகையால் நிலைகுலைந்த, நெஞ்சினை யுடைய என்னுடைய வரலாறு முழுவதும் தேவரீர் திருவுள்ளம் அறிந்ததன்றோ. எ.று.

     துன்ப மிகுதியால் மிகவும் மெலிந்தமை புலப்பட, “தரித்திடேன் சிறிதும் தரித்திடேன்” என்றும், அத்துன்பங்களால் வந்த தளர்ச்சி முதலியவற்றைப் போக்கித் திருவருள் ஞான நெறியின் வழி வகை அனைத்தையும் விளங்க உரைத்தருள வேண்டுமென விண்ணப்பிப்பாராய், “எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே தெரித்திடல் அனைத்தும் தெரிந்திடல் வேண்டும்” என்றும் தெரிவிக்கின்றார். திருவருள் ஞான நெறியைத் தெரிவிக்கா தொழியின் தமக்கு எய்தக் கூடிய கேடு இதுவென்பாராய், “தெரித்திடாய் எனில் இடர் எனைத்தான் எரித்திடும் அந்தோ என்செய்வேன்” எனப் புலம்புகின்றார். இறைவனைத் தவிர திருவருள் ஞானப் பேற்றிற் குரிய இடமும், அதனைப் பெறுதற்கு வாய்க்கும் துணையும் வேறே இல்லை யென்பாராய், “எங்கே எய்துகேன் யார் துணை என்பேன்” என இயம்புகின்றார். உலகியல் வாழ்வு நல்கும் மயக்கங்களாலும் தாக்கும் துன்பங்களாலும் மனநிறை யழிந்து வருந்தினேன் என்பாராய், “திரிந்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே” என்று ஓதுகின்றார். நிறையழிந்த நெஞ்சினைத் “திரித்த நெஞ்சு” என உரைக்கின்றார். திரிந்த என்பது எதுகை நோக்கித் திரித்த என வலித்தது. உயிர்க்குயிராய் உடனிருந்து காண்கின்றானாதலின் இறைவனை, “திருவுளம் தெரிந்தது தானே” எனக் கூறுகின்றார்.

     இதனால், திருவருள் ஞான நெறி தமக்கு உணர்த்தப்பட வில்லையானால் தன்னை உலகியல் துன்பங்கள் சுட்டெரித்து விடும் என இறைவனிடம் முறையிட்டவாறாம்.

     (4)