3744.

     தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
          சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
     தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
          திருவுளம் தெரிந்ததெந் தாயே
     ஆன்எனக் கூவி அனைந்திடல் வேண்டும்
          அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
     நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
          நடம்புரி ஞானநா டகனே.

உரை:

     திருச்சிற்றம்பலத்தின்கண் ஆடல் புரியும் ஞான நாடகத் தலைவனே! நீ தானே போந்து என்னைக் கூடும் சமயம் இதுவே யென்று உண்மையாக உணர்ந்து தனித்துத் தேன் ஊறிச் சிந்தித்திருக்கிறேன்; என் தந்தையே; இது நின் திருவுள்ளம் அறிந்ததாம்; பசு போலக் கத்திக் குரல் காட்டி என்னைச் சேர்ந்திடல் வேண்டும்; அரைக் கணமேனும் நீ என்னை அடைதற்குத் தாமதிப்பயாயின் நான் உயிரோடு இருக்கும் திறம் அறியேனாவேன். எ.று.

     திருச்சிற்றம்பலம் ஞான சபையாதலால் அதன்கண் கூத்தப் பெருமான் நின்று ஞான நாடகம் செய்கின்றான் என்பது பற்றி, “திருச்சிற்றம்பலத்தே நடம்புரி ஞான நாடகனே” எனக் கூறுகின்றார். ஞான நாடகன் - ஞான நாடகத்தை ஆடுபவன். உயிர்களைப் பற்றியிருக்கும் மலம், மாயை, கன்மம் ஆகிய முன்றையும் தனது திருக்கூத்தால் போக்கி ஞானம் எய்தி உயிர்கள் சிவபோகம் எய்துவிக்கும் குறிப்பினை உடையதாகலின், ஞான நாடகம் எனப்படுகின்றது. மக்கட் பிறப்பெய்தி வாழ்வாங்கு வாழ்ந்து வரும் சமயம் இறைவன் உயிர்க்குயிராய்க் கலந்து மெய்யுணர்வு நல்கும் காலமாதலை ஞான நூல்கள் உணர்த்த உணர்ந்தமை விளங்க, “தான் எனைப் புணரும் தருணம் ஈதெனவே சத்தியம் உணர்ந்தனன்” என உரைக்கின்றார். மக்கட் பிறப்பாகிய சகல நிலையைத் “தருணம் ஈது” எனச் சுட்டிக் கூறுகின்றார். சிந்திப்பார் சிந்திக்குந் தோறும் தேனூறி இன்பம் செய்தலால், “தனித்துத் தேனூறக் கருதி இருக்கின்றேன்” எனத் தெரிவிக்கின்றார். “சிந்திப்பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. மனவுணர்வும் உண்மையுணர்வும் கலந்தோங்கும் இப்பிறப்பில் உயிர்கள் தன்னை யறிந்து அடைய மாட்டாமை எண்ணி இறைவன் தானே எழுந்தருளி ஞான நெறி காட்டுதல் முறை யென்பது இறைவன் அறிந்த செயலாதலின் “இது நின் திருவுளம் தெரிந்தது” என உரைக்கின்றார். தேனூறச் சிந்திக்கும், நிலை பக்குவ முடையார்க்கன்றி எய்தாதாதலின், ஞானப் பேற்றிற்குத் தான் ப்க்குவ முற்றிருப்பதை உணர்த்துதற்கு, “தனித்துத் தேனுறக் கருதி இருக்கின்றேன்” எனக் கூறுகின்றார். ஆன் - பசு. புறத்தே சென்ற பசு அம்மா எனக் கத்தித் தன் குரல் காட்டிக் கன்றை அணைதல் போல நினது வரவை முன்னறிவித்து என்னைக் கூடுதல் வேண்டும் என்பார், “ஆனெனக் கூவி அணைந்திடல் வேண்டும்” என நவில்கின்றார். இளமையும் அறியாமையு முடைமை பற்றிக் கன்றிற்குத் தன் குரல் காட்டித் தாய்ப் பசு முன்னறிவிப்பது போல, மெய்யுணர்வின்றி உலகியல் மாயையால் அலைப்புண்டிருக்கும் எனக்கு உனது வரவு முன் தெரிதல் வேண்டும் என்றற்கு, “கூவி அணைந்திடல் வேண்டும்” எனக் கூறுகின்றார். இறைவனாகிய உனது ஞான வரவு தாழ்க்குமாயின் பொறுத்துத் தாங்கும் வன்மையின்றி உயிர் விடுவேன் என உரைப்பாராய், “தாழ்க்கில் நான் இருப்பறியேன்” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால், இறைவன் தானே வந்து கூடி ஞானப் பேற்றின்பம் தர வேண்டும் என இறைஞ்சியவாறாம்.

     (5)