3745.

     ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
          நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
     ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
          இந்தநாள் அடியனேன் இங்கே
     ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
          உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
     ஏனென வினவா திருத்தலும் அழகோ
          இறையும்நான் தரிக்கலன் இனியே.

உரை:

     குறை சிறிதுமில்லாத பூரணப் பொருளாகிய சிவ பெருமானே! முன்பொரு நாள் சிவஞானத்தையும் அதனால் பெறலாகும் அனுபூதியையும் நாயினும் கடைப்பட்ட நான் இனிது அறிந்து கொள்ள உணர்த்தி, என்பால் எனக்குண்டாகிய தாழ்வையும் துன்பத்தையும் போக்கி யருளினாயாக, இக்காலத்தில் அடியவனாகிய யான் இங்கே இருந்து கொண்டு உன் பெயர்களைச் சொல்லி அந்த ஞானப் பேறு குறித்து முயன்ற வண்ணம் இருக்கின்றேன்; ஒரு சிறிதேனும் நீ மனம் இறங்கி வந்து ஏன் என்று கேளாதிருப்பது உனக்கு அழகாகாது; இப்பொழுது நான் சிறிது பொழுதும் நின் திருவருள் பெருமையைத் தாங்க மாட்டேனாகின்றேன். எ.று.

     தொடக்கக் காலத்தில் தமக்கு இறைவன் சிவஞானத்தின் சிறப்பையும் அதனை எய்தும் அனுபவ நெறியையும் தெளிவாக உணர்ந்து ஒழுகுமாறு உணர்த்திய திறத்தை, “ஞானமும் அதனால் அடையனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி” என்பதனால் வடலூர் வள்ளல் நமக்கு அறிவிக்கின்றார். அதனால் தான் பெற்ற பயன் இது வென இயம்புவாராய், “ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்” என்று கூறுகின்றார். இந்த நாள் என்பது சிவானுபவத்தில் மூழ்கித் திளைத்து முதிர்ந்திருக்கும் காலத்தைச் சுட்டி நின்றது. இத்திருவடி யன்றி வேறு ஒன்றையும் பொருளாகக் கொள்ளா திருக்கின்றேன் எனத் தனது மனநிலை உரைப்பாராய், “அடியேன்” என மொழிகின்றார். அதனால் உன்னையே நினைந்து உன் திருப்பெயர்களையே மொழிந்து, உன் திருவடி ஞானப் பேற்றிற்கே யுரிய முறையில் முயன்ற வண்ணமிருக்கின்றேன்” என்று தெரிவிப்பாராய், “இங்கே நின்றனைக் கூவி அழைக்கின்றேன்” என்றும், திருவருள் ஞானப் பேறு இன்னும் தமக்கு எய்தாமை புலப்பட, “ஒரு சிறிது எனினும் ஏன் என வினவாதிருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கிலன் இனியே” என்றும் சொல்லி வருந்துகின்றார் இறையும் - சிறிது பொழுதும். “வேண்டுவராக்கு வேண்டுவது ஈயாத குறை ஒன்றுமில்லாதவன் நீ “ என்ற கருத்துப்பட “ஊனம் ஒன்றில்லோய்” எனக் குறிப்பாய் உரைக்கின்றார். ஒரு குறையும் இல்லாத பெருமானாகிய நீ இந்த நாளில் ஏனென வினவா திருக்கும் குறை யுடையவனாதல் கூடாதென்பது குறிப்பு.

     இதனால் ஞானமும், ஞான அனுபூதியும் இறைவன் வடலூர் வள்ளலார்க்கு நல்கிய வரலாறு குறிக்கப்பட்டதாம்.

     (6)