3746. இனியநற் றாயின் இனியஎன் அரசே
என்னிரு கண்ணினுண் மணியே
கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே
கனகஅம் பலத்துறும் களிப்பே
துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
சோர்வுறு முகமும்கொண் டடியேன்
தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
தந்தநற் றந்தைநீ அலையோ.
உரை: இனிமைப் பண்புடைய பெற்ற தாயினும் இனியனாகிய அருளரசே; என்னுடைய இரண்டு கண்களிலும் விளங்கும் மணி போல்பவனே; பழுத்த கனி போல, இனிக்கின்ற கருணைப் பண்புடைய நிறைந்த அமுதமாகியவனே; பொன்னம்பலத்தின்கண் காண்பவரை மகிழ்விக்கும் இன்பப் பொருளே; வெறுத்த உள்ளமும், சோம்பிய உணர்வும், சோர்வுற்ற முகமும் கொண்டு அடியவனாகிய யான் நினது ஞானவின்பம் பெறாமையால் தனித்து உள்ளம் அழுங்குதல் நின் திருவருட்கு அழகாகாது; என்னைப் பெற்ற நல்ல தந்தையும் நீயே யன்றோ. எ.று.
நற்றாய் - பெற்ற தாய். இனிமைப் பண்பு அவட்கு இயல்பாதலின், “இனிய நற்றாய்” என்றும், இறைவனது அருட் பண்பு அவளது இனிமைப் பண்பினும் மிக்கிருத்தல் தோன்ற, “நற்றாயின் இனிய என் அரசே” என்றும் போற்றுகின்றார். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உழப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறப்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே” என மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. கண்ணுக்கு ஒளியும், பார்க்கும் தன்மையும் நல்குவது கண்ணின் உள் மணியாதலால், “என்னிரு கண்ணினுள் மணியே” எனப் புகல்கின்றார். இறைவனது திருவருளை நினைக்கும் தோறும் இன்பம் ஊற்றெழுந்து பெருகுவது பற்றி, “கனியென இனிக்கும் கருணை ஆரமுதே” என உரைக்கின்றார். கனக அம்பலம் - பொன்னம்பலம். பொன்னம்பலத்தில் காட்சி தரும் திருக்கூத்து, காண்பார் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியை விளைவிப்பதால், “கனக அம்பலத்துறும் களிப்பே” என உரைக்கின்றார். களிப்புத் தருகின்ற பெருமானைக் “களிப்பு” என்றது உபசார வழக்கு. துனி - வெறுப்பு. நினைத்தது பெருமையால் எய்துவது பற்றி, “துளியுறும் மனம்”என்றும், நுண்பொருளை நாடி இன்புறும் உணர்வு அது செய்யாது மடங்குதல் பற்றி, “சோம்புறும் உணர்வு” என்றும், இவ்விரண்டாலும் உடம்பின்கண் உளதாகும் தளர்ச்சியைப் புலப்படுத்தற்கு, “சோர்வுறுமுகம்” என்றும் சொல்லுகின்றார். திருவடியைப் பற்றாகக் கொண்ட அடிமையாகிய யான் ஆண்டவனாகிய உனது அருள் பெறாது வருந்தி மெலிதல் முறையாகாது என்றற்கு, “அடியேன் தனியுளங் கலங்கல் அழகதோ” என்று உரைக்கின்றார். அழகிதோ என்பது செய்யுளாகலின் அழகதோ என வந்தது. தந்தைக்கு இயல்பு ஞானம் பெறச் செய்தலாகலின், “நற்றந்தை நீ யலையோ” என நவில்கின்றார்.
இதனால், திருவருள் ஞானவின்பம் பெறாமையால் எய்திய, தமது நிலைமையைத் தெரிவித்தவாறாம். (7)
|