3747. தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
சாமியும் பூமியும் பொருளும்
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
சுற்றமும் முற்றும்நீ என்றே
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
நீதியோ நின்அருட் கழகோ.
உரை: தந்தை, தாய், குரு, யான் போற்றிப் பரவும் தெய்வம், உடமையாகிய நிலம், பொருள், சொந்தமாகிய வாழ்வு, நட்பு, துணை, சுற்றத்தார் ஆகிய எலாம் நீ யென்றே நினைந்து இவ்வுலகில் இருக்கின்றேன்; இந்த எனது இயல்பு தேவரீர் நன்கறிந்ததேயாம்; பழி தூற்றுகின்ற இவ்வுலகில் யான் மனம் கலங்கி வருந்துவது நீதியாமோ; எந்தையாகிய உன் திருவருளுக்கு அழகாகுமோ? எ.று.
குரு - ஞான ஆசிரியன். யான் போற்றும் சாமி - யான் வழிபடுகின்ற தெய்வம். சாமி என்னும் சொல் பொன்னுக்குமாதலால் யான் போற்றும் சாமி என்பதற்கு, யான் பேணிக் காக்கும் பொன் என உரைப்பினும் அமையும். பூமி - விளைபுலமாகிய நிலத்தின் மேற்று. தந்தை தாய் முதலாகக் கூறிய அனைத்தையும் சிவமென்றே கருதியிருக்கும் தன்மை புலப்பட, “நீ யென்றே சிந்தை உற்றிருக்கின்றேன்” எனத் தெரிவிக்கின்றார். மக்கள் உலகில் ஒருவரை ஒருவர் போற்றுதலினும் தூற்றுதல் மிகுதியாதலின், “நிந்தை செய்யுலகு” எனக் குறிக்கின்றார். தூற்றுகின்ற சூழலில் மனவமைதி பிறவாதாதலால், செய்யுலகில் யான் உளம் கலங்கல் நீதியோ” என மொழிகின்றார். திருவருள் நெறியில் நிற்கின்ற என் போலியர் இச் சூழலிற் சிக்கி வருந்துதல் நினது திருவருள் நெறிக்கு அழகாகாது என்பாராய், “நின் அருட்கு அழகோ” என வினவுகின்றார்.
இதனால், அருள் நெறி நிற்கும் தமக்கு, உலகியல் வாழ்வு தாராமை யுணர்த்தியவாறாம். (8)
|