3748.

     அழகனே ஞான அமுதனே என்றன்
          அப்பனே அம்பலத் தரசே
     குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
          கொழுநனே சுத்தசன் மார்க்கக்
     கழகநேர் நின்ற கருணைமா நிதியே
          கடவுளே கடவுளே எனநான்
     பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
          பழங்கணால் அழுங்குதல் அழகோ.

உரை:

     அழகுருவாய் ஆனவனே; ஞானமாகிய அமுதமயமானவனே; எனக்கு அப்பனே; அம்பலத்தில் எழுந்தருளும் அருளரசே; இளமைப் பண்புருவாயவனே; இன்பக் கொடி போன்ற உமாதேவியினுடைய உள்ளம் மகிழும் கணவனே; சுத்த சன்மார்க்கச் சங்கத்தில் நேர்மையான நின்ற கருணைப் பெருஞ் செல்வமே; கடவுளே என்று நினைந்தும் சொல்லியும் பழகி அமைந்துள்ளேனாதலால் இன்னமும் இவ்வுலகியல் நல்கும் துன்பத்தால் வருந்தி மெலிவது நினது திருவருட்கு அழகாகாது காண். எ.று.

     அழகென்னும் பண்புக்கு உருவாய் அமைந்தவனாகையால் “அழகன்” என்றும், சிவஞானமே வடிவாய் நினைக்கும் அன்பர் கட்கு அமுதம் போல் இன்பம் தருபவனாய் விளங்குதல் பற்றி, “ஞான அமுதனே” என்றும் உரைக்கின்றார். குழகன் -இளமைப் பண்புக்கு உருவா யிருப்பவன். இன்பத்தின் உருவாய்ப் பூங்கொடி போன்று விளங்குதலின் உமாதேவியை, “இன்பக்கொடி” என இயம்புகின்றார். கொழுநன் - கணவன். கழகம் - சங்கம். சுத்த சன்மார்க்கச் சங்கத்தின் தலைவனாதலால், “சுத்த சன்மார்க்கக் கழக நேர் நின்ற மாநிதியே” எனப் புகல்கின்றார். கருணை மாநிதி - திருவருள் ஞானச் செல்வம். காட்சிக் கருவிகளாகிய கண் முதலிய இந்திரியக் காட்சி எல்லையையும், மனம் முதலிய மானதக் காட்சி எல்லையையும், அவற்றிற்கு அப்பாலாய யோகக் காட்சி, தன் வேதனைக் காட்சிகள் நல்கும் தத்துவக் காட்சி எல்லையையும் கடந்த பரம்பொருளாதல் பற்றி, “கடவுள்” என்று நினைந்தும், தொழுதும், போற்றியும், வணங்கியும் பயின்றுள்ளமை தோன்ற, “கடவுளே கடவுளே என நான் பழக நேர்ந்திட்டேன்” எனப் பகர்கின்றார். இந்நெறியில் கருவி கரணங்களை இயக்கி வாழ்கின்ற யான் ஞான வின்பம் துய்த்து மகிழ்ந்திருப்பதை விடுத்து உலகியல் துன்பத்தால் வருந்தி மெலிவது முறையாகாது என்பார், “இன்னும் இவ்வுலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ”என முறையிடுகின்றார். பழங்கண் - துன்பம்.

     இதனால், சுத்த சன்மார்க்க ஞான நெறியில் இன்பம் பெற்று, இனிதிருக்க வேண்டிய யான் உலகியல் துன்பத்தால் வருந்துதல் நலமாகாது என விண்ணப்பித்தவாறாம்.

     (9)