3749. பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
மற்றொரு பற்றும்இங் கறியேன்
சழங்குடை உலகில் தளருதல் அழகோ
தந்தையும் தாயும்நீ அலையோ.
உரை: இனிய பழத்தினின்றும் பிழிந்து சாற்றின் சுவையையுடைய பாட்டுக்கள் அல்லாவாயினும் பத்தர்களும் ஞானப் பித்தர்களும் பாடுகின்ற பழமையான போக்கில் நின்ற பெரிய பாட்டுக்களையும் கேட்டு மகிழ்வது உனது திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சி தருவதாம் என்று அறிந்த நாள் முதலாக, நின்று நிலவுகின்ற நின் புகழையே யானும் பாடுவது மேற்கொண் டுள்ளேன்; வேறு எனக்கு ஒரு பற்றும் உலகில் என்னால் அறிய முடியவில்லை; அப்பெற்றியானாகிய யான் குற்றம் நிறைந்த உலகு நல்கும் துன்பத்தால் தளர்ச்சி யுறுவது நலமாகாது; எனக்கு மெய்யுணர்வருளும் தந்தையும் உடல்நலம் அருளும் தாயும் நீ யன்றோ. எ.று.
நன்கமைந்த பாட்டுக்களிடத்துப் பெறலாகும் இன்பத்திற்கு இனிய பழங்களின் சாற்றின் சுவையை உவமை கூறுவது மரபாதலின், “பழம் பிழி மதுரப் பாட்டு”எனச் சிறப்பிக்கின்றார். “தென்னுண் தேனில் தேக்கிய செஞ்சொற் கவி யின்பம்” என்று கம்பர் கூறுவது காண்க. பத்தர் - பத்திமான்கள். பித்தர் - சிவஞானப் பேற்றிலேயே ஈடுப்பட்டுப் பிறிது எவற்றையும் விரும்பாது ஒழுகுபவர். அவர்கள் பாடும் பாட்டுக்கள் தொன்று தொட்டுப் பழமை நெறியிலேயே அமைந்து கிடத்தலின் அவற்றை, “பத்தரும் பித்தரும் பிதற்றும் கிழப் பெரும் பாட்டு” என ஓதுகின்றார். இந்நாளையோர்க்கு அவை இனிய பாட்டுக்களாகத் தோன்றாவிடினும் அவற்றையும் கேட்டு மகிழ்வதில் நீ சிறந்தவன் என்று சான்றோர் சொல்லக் கேட்டுள்ளேன் என்பாராய், “பிதற்றும் கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ளக் கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய்” எனக் கூறுகின்றார். கிழப் பாட்டு எனற்பாலது எதுகை நோக்கிக் கிழம் பாட்டு என வந்தது. கிழப் பாட்டு என்பதை விருத்தப் பாட்டு என்பது முண்டு. பெரும் பாட்டு என்பதில் பெருமை பன்மை குறித்து நின்றது. பழம் பாட்டுக்கள் இந்நாளைய புதுமைப் புலவர்க்குச் சுவை யுடையதாகத் தோன்றாமை விளங்க, “பழம் பிழி மதுரப் பாட்டல” எனப் பிரித்துக் காட்டுகின்றார். புதியரிற் புதியனாகலின் இறைவனுக்குப் புதுமைப் பாட்டுக்கள் ஒத்தவை என்பது இதனால் விளக்கிக் காட்டுகின்றார். வழங்குதல் - தொன்று தொட்டு நின்று நிலவுதல். பாடும் பாட்டுக்கள் பழமையும் புதுமையும் உடையவாயினும் நினது புகழ் அவற்றிற்குப் பொருளாய் நின்று நிலவுகின்றமை யுணர்ந்து பாடலுறுகின்றேன் என்பாராய், “வழங்கும் நின் புகழே பாடுறுகின்றேன்” என உரைக்கின்றார். இறைவன் திருப்புகழைப் பாடுவதல்லது வேறு பற்றுக் கோடு தமக் கில்லாமை தோன்ற, “மற்றொரு பற்றும் இங்கறியேன்” எனப் புகல்கின்றார். சழக்கு - குற்றம்; எதுகை நோக்கிச் சழங்கு என வந்தது. உணர்வு தருவதால் தந்தையையும் உடல்நலம் உறுத்துவதால் தாயையும் உவமம் செய்து “தந்தையும் தாயும் நீ அலையோ” என வேண்டுகின்றார்.
இதனால், பாட்டுக் குருகும் பரமன் என்று பெரியோர் கூறுவதைப் பற்றாகக் கொண்டு வடலூர் வள்ளல் பாட்டுக்கள் பாடுவதை மேற்கொண்டுள்ளார் என்பது தெரிவித்தவாறாம். (10)
|