3750.

     தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
          சபையிலே தனிநடம் புரியும்
     தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
          தூக்கமும் சோம்பலும் துயரும்
     மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
          வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
     நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
          நல்அருட் சோதிதந் தருளே.

உரை:

     ஞான சபையில் தனிக் கூத்தியற்றும் தூயவனாகிய நின் பாதம் இரண்டுமே என்னைப் பெற்ற தாயும் ஒப்பற்ற தந்தையுமாம் என எண்ணி ஒழகுகின்றேனாகவும், தூக்கமும், சோம்பலும் துயரமும், உலகியல் மாயையும், வினைகளும், மறைப்பும், ஆணவத் தன்மையும் என்னை வளைத்துக் கொண்டு துன்புறுத்துவது முறையாகுமா? நாயினும் கடைப்பட யான் இனி ஒரு சிறிது பொழுதும் தாங்க மாட்டேன்; ஆதலால் அருட் சோதியாகிய நல்ல நினது ஞானத்தை எனக்குத் தந்தருள்க. எ.று.

     ஞான சபை - திருச்சிற்றம்பலம். ஞான சபையின் கண் உலகுயிர் கட்கு ஞானமும் உய்தியும் உண்டாதற் பொருட்டு இறைவன் அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்றான் என்பது பற்றி அதனையே தமக்குத் தாயும் தந்தையுமாக எண்ணி ஒழுகும் திறத்தை, “ஞான சபையிலே தனிநடம் புரியும் தூய நின் பாதத் துணை தாயும் என் ஒருமைத் தந்தையுமாம் எனப் பிடித்தேன்” என வடலூர் வள்ளல் எடுத்தோதுகின்றார். கூத்தப் பெருமானுடைய திருவடி யிரண்டும் உண்மை ஞானத்தையும் உலகியல் வாழ்வையும் தருவதை விளக்க, “தாயும் என் ஒருமைத் தந்தையும் நின் பாதத் துணை” எனக் கூறுகின்றார். இந்நெறியில் எனக்கு ஊக்கமும் ஞானத் தெளிவும் வேண்டியிருக்க, அவற்றிற்கு மாறாக ஒருபால் தூக்கமும், சோம்பலும், துயரமும், ஒருபால் உலகியல் மாயையும், முக்குண மறைப்பும், ஆணவச் செருக்கும் சூழ்ந்து வருத்துகின்றன என்பாராய், “தூக்கமும் சோம்பலும் துயரும் மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனைப் பிடித்திடல் வழக்கோ” எனக் கூறுகின்றார். திருவருள் ஞான விளக்கம் எய்தினாலன்றி இவற்றைத் தாங்கும் தன்மை தனக்கு எய்தாது என்பார், “நல்லருள் சோதி தந்தருள்” என்றும், “இனி ஓர் கணம் தரிப்பறியேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், திருவடித் துணையே தாயும் தந்தையுமாம் என எண்ணி வாழ்கின்ற என்னைத் தூக்கம், சோம்பல் முதலாகிய துன்பங்கள் சூழ்ந்து வருத்துவது முறையாகாது என விண்ணப்பித்தவாறாம்.

     (11)