3751.

     சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
          சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
     நீதியே நிறைநின் திருவருள் அறிய
          நிகழ்த்தினேன் நிச்சம் இதுவே
     ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
          உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
     ஆதியே நடுவே அந்தமே ஆதி
          நடுஅந்தம் இல்லதோர் அறிவே.

உரை:

     பல நூல்களை ஓதிப் பயின்றாலும் அந்த உணர்வால் அறிதற்கரிதாகிய பெரிய பொருளாகியவனே; உயிர்கட் குயிராய் ஒளி நல்குபவனே; எல்லாப் பொருட்கும் ஆதியும் நடுவும் முடிவும் ஆகியவனே; தனக்கு ஆதியும் நடுவும் முடிவும் இல்லாத அறிவுருவாகியவனே; என்னை இனியும் சோதித்தல் வேண்டாம்; சோதிக்கத் தொடுங்குவாயாகில் உடன் முழுதும் சூழ்ந்திருக்கின்ற என் உயிரை மாய்த் தொழிக்க நான் தொடங்குவேன்; நீதியே நிறைந்த நின் திருவருள் அறிய உரைக்கின்றேன்; இது உண்மை. எ.று.

     “உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்” எனச் சான்றோர் உரைத்தலால், “ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே” என்று உரைக்கின்றார். நூலறிவு கொண்டு பரம்பொருளை அறிதலாகாது என்பது கருத்து, “நூலறிவு பேசி நுழைவிலார் தாம் திரிக” என்று காரைக்காலம்மையார் உரைப்பது காண்க. நூல்களனைத்தும் உலகில் வாழ்ந்த சான்றோர்களின் உலகியல் அனுபவ அறிவாதலின் அவை அனுபவ எல்லைக் கப்பாற்பட்ட பரம்பொருளைக் காட்டா என்பது பற்றி வடலூர் வள்ளல் இவ்வாறு கூறுகின்றார். பெரும் பொருள் என்பதை வடநூலார் “பிரமப் பொருள்” என்பர். உயிர்க் குயிராயிருந்து உயிருணர்வு தடுமாறுங்கால் ஒளி தந்து உணர்வை மிகுவித்தலின் இறைவனை, “உயிர்குயிராகிய ஒளியே” என உரைக்கின்றார். உலகியற் பொருட்கள் அத்தனைக்கும் உளவாகும் தோற்றம், இருப்பு, கேடுகட்குக் காரணானாதலால் பரம்பொருளை, “ஆதியே நடுவே அந்தமே” என ஓதுகின்றார். உலகியல் பொருள்கட்கு ஆதியும் அந்தமுமாகிய இறைவனுக்குத் தோற்றமும், முடிவும் இல்லை யென்பதைக் காட்டுதற்கு, “ஆதி நடு அந்தம் இல்லதோர் அறிவே” என மொழிகின்றார். அறிவே பரம் பொருளுக்கு உருவாகலின் “அறிவே” என்கிறார். “அகர உயிர் போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து” என்று உமாபதி சிவனார் உரைப்பது காண்க. தூக்கம், சோம்பல் முதலியவற்றாலும், மாயை வினை முதலியவற்றாலும் தாக்கி வருத்துவது தனது மனவொருமையையும் அறிவுத் திண்மையையும் ஆராய்வது போலத் தோன்றுதலின், “சோதியேல்” என விண்ணப்பிக்கின்றார். அவ்வாறு சோதிக்கத் தொடங்கின் சோதனைகளைத் தாங்கக் கூடிய மனத் திட்பமும், அறிவுத் திறனும் தம்பால் இல்லாமையால், சாதல் ஒழிய வேறு செயற்பாலது ஒன்றுமில்லை என்பாராய், “எனை நீ சோதனை தொடங்கின் சூழுயிர் விடத் தொடுங்குவன் நான்” என அறிவிக்கின்றார். உடல் முழுதும் பரந்து இருத்தலின் உயிரைச் “சூழ் உயிர்” எனச் சொல்லுகின்றார். நீதியே இறைவனுக்கு உருவாதல் பற்றி, “நீதியே நிறை நின் திருவருள்” என்றும், அருள் நிறைந்த நின் திருவுள்ளம் அறிய இதனைத் தெரிவிக்கின்றேன் என்பாராய், “திருவருள் அறிய நிகழ்த்தினேன்” என்றும் கூறுகின்றார். வெறும் சொல்லுருவாய் நில்லாமல் என் கூற்றைச் செயலாலும் வலியுறுத்துவேன் என்பாராய், “நிச்சயம் இதுவே” என்று வற்புறுத்துகின்றார்.

     இதனால், உலகியல் துன்பங்களைத் தந்து தன்னைச் சோதித்தல் கூடாதென விண்ணப்பித்தவாறாம்.

     (12)