3752. இல்லைஉண் டெனும்இவ் விருமையும் கடந்தோர்
இயற்கையின் நிறைந்தபேர் இன்பே
அல்லைஉன் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
அம்பலத் தாடல்செய் அமுதே
வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
வழங்குக நின்அருள் வழங்கல்
நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
நான்உயிர் தரிக்கலன் அரசே.
உரை: அருளரசே! இல்லை யென்றும் உண்டென்றும் பேசப்படும் இவ்விரு தன்மையும் கடந்து அமைந்த இயற்கை நிலையில் நிறைந்து விளங்கும் பேரின்பப் பொருளாகிய பெருமானே; அறியாமையாகிய இருளைக் கெடுத் தெழுந்த ஒப்பற்ற பெரிய சுடரே; அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற அமுதமே; இப்பொழுது அடியேனுடைய துன்பமெல்லாம் தவிர்த்து, உன்னுடைய அருள் இன்பத்தை நல்குக; நல்குவதில் இன்று நன்றன்று நாளை நல்குவம் என்று சொல்வாயாயின் நான் உயிர் வாழேன். எ.று.
உலகியல் பொருட்கள் அனைத்திற்கும் தோற்றத்தால் உண்மைத் தன்மையும், மறைதலால் இன்மைத் தன்மையும் இயல்பாக அமைந்தன வெனினும், உளதென்றும் இலதென்றும் கூறும் எல்லைக்கு அப்பாற்பட்ட இயல்பினதாகிய சிவானந்தத்தை, “இல்லை உண்டு எனும் இவ்விருமையும் கடந்தோர் இயற்கையின் நிறைந்த பேரின்பம்” என உரைக்கின்றார். அல் - இருள்; அஃதாவது மலமாயை கன்மங்களால் உயிர்கட்கு உளதாகும் அஞ்ஞான இருள். திருவருள் ஞானவொளி அவ்விருளை விழுங்கிச் சிறந்தோங்குதலின், “அல்லை யுண்டெழுந்த தனிப் பெருஞ்சுடரே” என விளம்புகின்றார். இருளைப் போக்கும் ஒளியை, அவ்விருளை உண்டொழித்ததாகக் கூறுவது செய்யுள் மரபு. “அகலிரு விசும்பில் பாயிருள் பருகிப் பகல் காண்டெழுதரு பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண்) எனச் சங்கச் சான்றோர் கூறுவதும் காண்க. அடியேன் துயரெலாம் வல்லை தவிர்த்து என இயைக்க, துயர் தவிராத வழித் திருவருள் இன்பத்தை அனுபவிக்க முடியாதாகலின், “அடியேன் துயரெலாம் இன்று வல்லை தவிர்த்து நின் அருள் வழங்குக” எனக் கூறுகின்றார். நல்லது எனபது நல்லை என வந்தது. “வழங்கல் இன்று நல்லதலது” என இயைத்து இன்று அருள் வழங்குதல் நன்றன்று எனப் பொருளுரைக்க. உடம்பினின்றும் உயிர் நீங்கும் காலம் இதுவென வரையறுத்து உரைத்தற் காகாமையின், “நாளை என்றிடில் உயிர் தரிக்கலன்” என நவில்கின்றார்.
இதனால், உயிர் வாழ்வின் நிலையாமை கூறி இன்றே அருள் வழங்குகவென அருள் வேண்டியவாறாம். (13)
|