3753. அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
அருளர செனஅறிந் தனன்பின்
உரைசெய்கின்ற அருள்மேல் உற்றபே ராசை
உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
வழிகின்ற தென்வசங் கடந்தே
இரைசெய்என் ஆவி தழைக்க அவ் வருளை
ஈந்தருள் இற்றைஇப் போதே.
உரை: எந்தையே! உலகிலுள்ள் அரைசுகள் எல்லாம் வழங்கி வருமாறு செய்யும் ஒப்பற்ற அரசாக விளங்குவது நின்னுடைய அருளரசு என்று அறிந்து கொண்டேன்; பின்பு சான்றோர் புகழ்ந் துரைக்கின்ற நின்னுடைய திருவருளின்பால் எனக்குண்டாகிய பேராசை என் உள்ளமெல்லாம் கவர்ந்து கொண்டது; மேலும் அது ஒரு வரையறைக்குள் நில்லாது மேன்மேலும் பொங்கித் ததும்பி என் வசமாகாமல் வழிகின்றது; ஓதுகின்ற என்னுயிர் தழைத் தோங்குமாறு இன்றே இப்போதே அத் திருவருளை எனக்களித் தருள்வாயாக. எ.று.
உலகத்தில் ஆங்காங்கிருந்து ஆட்சி புரிகின்ற அரசர்களெல்லாம் வழி வழியாக அரசளிப்பதற்குக் காரணம் நினது ஒப்பற்ற அரசாகிய திருவருள் அரசு என்று நூலறிவாலும் இயற்கை அறிவாலும் அறிந்து கொண்டேன் என்பார், “அரைசெலாம் வழங்கும் - தனியரசு அது நின் அருளரசு” என உரைக்கின்றார். வழங்குதல் - வழி வழியாக வருதல். அது பகுதிப் பொருள் விகுதி. அந்த அறிவால் உனது திருவருளின்பால் எனக்குளதாகிய பேராசை என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டு விட்டது என்றற்கு, “உரைசெய் நின்னருள் மேலுள்ள பேராசை உளமெலாம் இடம் கொண்டது” என இயம்புகின்றார். இறைவனது திருவருள் சான்றோர் எல்லோராலும் புகழப்படுவது பற்றி, “உரைசெய் நின்னருள்” என உரைக்கின்றார். உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பேராசை வறையறையின்றி மேன்மேலும் பெருகிப் பொங்கி வழிகின்றது என புகலலுற்று, “வரைசெயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி என் வசம் கடந்து வழிகின்றது” என உரைக்கின்றார். திருவருளின்பால் பொங்கி எழுகின்ற ஆசையை வாய்க்குமிடந்தோறும் எடுத்தெடுத்தோதுதல் பற்றி, “இரைசெய் என் ஆவி தழைக்க” எனக் கூறுகின்றார். இரை செய்தல் - வாய் விட்டோதுதல். திருவருளாலன்றி உயிர் வாழ்தல் வளம் பெறாதாகலின், “ஆவி தழைக்க அவ்வருளை ஈந்தருள்” எனவும், அதனை இன்றே இப்பொழுதே தந்தருளுக என வேண்டுவாராய், “இற்றை இப்பொழுதே” எனவும் இயம்புகின்றார்.
இதனால், திருவருளின்பால் தமக்கு உண்டாகி யிருக்கும் பேராசைப் பெருக்கினை வடலூர் வள்ளல் எடுத்துரைக்கின்றார். (14)
|