3754. போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
தூயர்கள் மனம்அது துளங்கித்
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
தனிஅருட் சோதியால் அந்த
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
வழங்குவித் தருளுக விரைந்தே.
உரை: தங்கள் காலத்தை யெல்லாம் வீண் வழியிற் செலுத்திப் பயனிழந்த பேன் நிறைந்த வாழும் தலையினை யுடைய கீழ்மக்கள் செய்யும் சூதுகளைப் பிறர் சொல்லக் கேடகும் போதெல்லாம் உன் திருவடியே நினைந்து போற்றும் நல்லோர்களின் மனம் அசைந்து உடம்பின் தாதுகள் அனைத்தும் நிலை கலங்கித் தளர்ச்சி யுறுவது உனக்கு அழகாகாது; அவர்களது அந்தச் சூதுகள் அனைத்தையும் உனது திருவருள் விளக்கத்தால் போக்கிச் சுத்த சன்மார்க்க நெறியே உலகில் நிலவுமாறு விரைந்து அருள் புரிதல் வேண்டும். எ.று.
தலை யெலாம் அழுக்குற்று நாறத் தம் உடம்பையும் பொருளாக எண்ணாமல், காலத்தை வறிதே போக்கிப் பயனில்லன செய்து கெடுகின்ற கீழ்மக்களை, “போது எலாம் வீணிற் போக்கி ஏமாந்த புழுத்தலைப் புலையர்கள்” எனப் பழிக்கின்றார். நாட்டில் அவர்கள் தொகையே மிகுதியாக இருப்பதால் அவர்கள் செய்யும் தீய சூழ்ச்சிகளைப் பலரும் எடுத்துரைப்பதால் நாளும் இறைவன் திருவடியே நினைத்தொழுகும் நன்மக்கள் அவற்றைக் கேட்டு அவர்களால் மக்கள் வாழ்வு சீர்குலைவது நினைந்து மனம் வருந்தி உடல் மெலிந்து வருகின்றமை புலப்பட, “புலையர்கள் புணர்க்கும் சூதெல்லாம் கேட்கும் தொறும் உனைப் பரவும் தூயர்கள் மனமது துளங்கித் தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ” என வினவுகின்றார். தூயதாகிய நினது திருவடியையே எப்பொழுதும் சிந்தித்துத் தமது நினைவும் சொல்லும் செயலும் தூயராகிய சான்றோர்களை, “தூயர்” எனச் சொல்லுகின்றார். தோல் நரம்பு முதலிய எழுவகைத் தாதுக்களால் ஆகியதாகலின் உடம்பு நிலை கலங்கித் தளரும் திறத்தை, “தாதெலாம் கலங்கத் தளருதல்” என ஓதுகின்றார். சூதும் வாதும் திருவருள் நெறிக்கு மாறாவையாதலால் அவற்றை நல்ஞானத்தாலன்றிப் போக்கும் திறம் வேறில்லையாதலால், “தனியருள் சோதியால் அந்த வாதெலாம் தவிர்த்து” என்றும், அந்த நல்ஞானத்தைக் கடைப் பிடித்து ஒழுகுதற்கு அரணாவது சுத்த சன்மார்க்கமாதலால், “சுத்த சன்மார்க்கம் விரைந்து வழங்குவித்து அருளுக” என்றும் இசைக்கின்றார்.
இதனால், சுத்த சன்மார்க்கத்தின் தனிச் சிறப்பை எடுத்தோதியவாறாம். (15)
|