3755.

     விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
          விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
     கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
          கரைஎலாம் கடந்தது கண்டாய்
     வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
          வல்லவா அம்பல வாணா
     திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
          திகழ்வித்த சித்தனே சிவனே.

உரை:

     என்னை ஆட்கொண்டு அருளிய அருள் வள்ளலே; எல்லாம் வல்லவனே; அம்பலவாணனே; தோல் சுருங்கிய என் உடம்பை அருள் நிறைந்த திருவுடம்பாக்கி விளங்குவித்த சித்தனே; சிவபெருமானே; விண்ணப்பிக்கும் இச்சமயத்தில் நின் திருவருளை விரைந்து நல்குதல் வேண்டும்; ஏனெனில், என்னுள்ளம் நீராய் உருகி அன்பு பெருகி மேன்மேலும் பொங்கிக் கரை கடந்து ஒடுகின்றது காண். எ.று.

     வாழும் மக்கள் பலருள்ளும் தம்மைக் குறிக் கொண்டு அருள் ஞானம் வழங்கி ஆண்கொண்டமை பற்றி, “வரைந்தெனை மணந்த வள்ளலே” என உரைக்கின்றார். வரம்பில் ஆற்றலுடையவனாதல் பற்றி, “எல்லாம் வல்லவா” எனப் புகல்கின்றார். அம்பலவாணன் - அம்பலத்தில் வாழ்பவன். வாழ்நன் என்பது வாணன் என வந்தது. உண்பன உண்டு தசை மிகுந்து தோல் பரந்து விளங்கும் உருபும் உடம்பும், வயது முதிருமிடத்துச் சுருங்குதலின் தோல் சுருங்கிய உடம்பை, “திரைந்த உடம்பு” எனக் குறிக்கின்றார். திரைதல் - சுருங்குதல். திருவருள் ஞான வின்பத்தால் உடம்பு பூரித்துத் தோல் சுருக்கமின்றி அழகுறுதல் பற்றி, “திருவுடம்பாக்கித் திகழ்வித்த சித்தனே” என்று செப்புகின்றார்.

     இதனால், திருவருளால் உடம்பு திரைதலின்றி விளங்குமாறு தெரிவித்தவாறாம்.

     (16)