3756. சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
நன்மையும் நரைதிரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
சுகவடி வம்பெறும் பேறும்
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
உரை: சிவம் விளங்கும், கருணைத் திருநெறிச் சார்பும், தெய்வம் ஒன்றே என்னும் மனத் திறமும், ஒன்பது வகைப்பட்ட உருநிலைகளையுடைய தற்சுதந்திரத்தில் நிலவும் நன்மையும், நரை திரை முதலாகிய தேகத் துன்பம் தவிர்த்து, சுத்தம் முதலாகிய மூவகைப்பட்ட சுக வடிவத்தைப் பெறும் பேறும், தவ வாய்மை விளங்குகின்ற எல்லாம் வல்ல சித்தியும் எனக்குத் தந்தருள்க; அதற்கு இது தருணமாகும். எ.று.
சிவபரம்பொருளை முதலாக் கொண்டு இயங்கும் சமய நெறியைத் திருநெறி என்பர். சிவனை வழிபட் டோதும் தமிழ்த் திருமுறையைத் “திருநெறிய தமிழ்” எனத் திருஞானசம்பந்தர் முதலியோர் ஓதுவதும் காண்க. இத்திருநெறிக்கு அருளே பொருளாதலின், “கருணைத் திருநெறி” என்றும், அது சிவநெறிக் குரியதாகலின் அதுபற்றி, “சிவம் திகழ் கருணைத் திருநெறிச் சார்பு” என்றும் தெரிவிக்கின்றார். சமயங்களும் அவற்றிற்குரிய நூல்களும் அவற்றால் சுட்டப்படும் தெய்வங்களும் பலவாய் வழங்கினும் எல்லாவற்றிற்கும் முழுமுதலாய் விளங்குவது தெய்வம் ஒன்றே என்னும் ஞான வொருமைப் பாண்மையை, “தெய்வம் ஒன்றே என்னும் திறம்” என்று கூறுகின்றார். நவந்தரு நிலைகள்; அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று. இவற்றுள் நிற்கும் தெய்வ உருவங்கள் சிவம், சத்தி முதலாகிய ஒன்பது மூர்த்தங்களும் சுதந்திர வடிவங்களாதலால் அவற்றின்பால் பெறலாகும் நன்மையை, “நவந்தரு நிலைகள் சுதந்தரத்தியலும் நன்மை” எனக் கூறுகின்றார். நரை, திரை முதலிய தேகத்தின் பிணித் தொடர்புகள் நீங்கிய வழி யுளவாகும் அருட் சுகம், ஞான சுகம், சுத்த சுகமாகிய முத்தன்மையுடைய தேகத்தைப் பெறும் வாய்ப்பு தமக்கெய்த வேண்டும் என்பார், “நரை திரை முதலாம் துவந்துவம் தவிர்த்துச் சுத்தமாதிய முச்சுக வடிவம் பெறும் பேறு” என உரைக்கின்றார். துவந்துவம் - இரண்டும் சேர்ந்து வரல். தவம் செய்வார் பெறுகின்ற செயற் கரியவற்றைச் செய்துயரும் செம்மை நிலையை, “தவந்திகழ் எல்லாம் வல்ல சித்தி” என ஓதுகின்றார். தமது ஞானமும் ஒழுக்கமும் பக்குவமுற்றுத் திருநெறிச் சார்பும், ஒரு தெய்வக் கொள்கையும், சுதந்தரத் திருவுருவங்களின் நன்மையும், முச்சுக வடிவமும், எல்லாம் வல்ல சித்தியும் பெறுதற்குரிய தகுதி தமக்கு வாய்த்திருப்பது காட்டி இவற்றை எனக்குத் தந்து அருளுதற்குரிய காலம் இதுவென வற்புறுத்துவாராய், “நீ எனக்குத் தந்தருள் தருணம் ஈது” என மொழிகின்றார்.
இதனால், சிவநெறிச் சார்பு முதல் எல்லாம் வல்ல சித்தி ஈறாக நலமனைத்தும் எனக்குத் தந்தருள் என வடலூர் வள்ளல் வேண்டியவாறாம். (17)
|