3757. தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதி என் அரசே.
உரை: திருச்சிற்றம்பலத்தின்கண் அருட் பெருஞ் சோதியாய் விளங்குகின்ற அருளரசே; சுத்த சன்மார்க்கமாகிய ஒப்பற்ற நெறி உலகெங்கும் பரந்து திகழவும், கருணையும் சிவமும் ஒருபொருளெனக் கருதும் கருத்து மிகுந்து எம்போன்றவர் மனம் களிப்புறவும், எங்கும் பொருள் வளம் நிறைந்து ஓங்கவும், தெளிவு நிலை யாவர் அறிவின் கண்ணும் நிலை பெறவும், புண்ணியம் அழகுற யாவர்பாலும் நிலவவும் நினது திருவருளை விரும்பி நல்குவாயாக; அதற்கு இப்பொழுதே உரிய காலமாகும். எ.று.
சுத்த ஞான நெறியாதலின் சன்மார்க்கத்தை, “சுத்த சன்மார்க்கத் தனிநெறி” எனக் கூறுகின்றார். சுத்த ஞானம் என்பது எல்லா ஆன்மாக்களையும் ஒரு தன்மையவாகக் கருதி அன்பு பூண்டு ஒழகுவது. அந்தத் தூய ஞானத்தால் ஞான நெறியாகிய சன்மாரக்கத்திற்கு ஒப்பதும் உயர்ந்ததும் வேறில்லையாதல் பற்றி, “சுத்த சன்மார்க்கத் தனிநெறி” எனப் பாராட்டுகின்றார். இந்த நெறி மேற்கொண்ட விடத்து மகளிடையே மொழி வேற்றுமை, இன வேற்றுமை சமய வேற்றுமை, நிற வேற்றுமை முதலாகிய வேற்றுமை பலவும் ஒழிந்து உலகெங்கும் இன்ப வாழ்வு நிலைவுறும் என்பாராய், “உலகெலாம் தழைப்ப” என உரைக்கின்றார். உயிர்கள்பால் அன்பு செய்து ஒழுகும் கருணை நெறி வேறு; சிவ வடிவான ஒன்றே நெறியெனக் கருதும் நெறி வேறு என வேற்றுமை கொள்ளாது கருணை நெறி என்பதும் சிவநெறி என்பதும் பொருளால் ஒன்றே யெனக் கொண்டொழுகுவது சன்மார்க்கர் கொள்கையாதலின் அதனை உற்றவிடத்து உள்ளம் மகிழ்வுறுதலால், “கருணையும் சிவமே பொருளெனக் கருதும் கருத்துமுற்று எம்மனோர் களிப்ப” என ஓதுகின்றார். வாழ்வு பொருள் நிறைந்தும் மனம் தெளிவுற்றும் பொருந்தினாலன்றிப் புண்ணியச் செயல்கள் நாட்டில் பெருகா னென்பது பற்றி, “பொருள் நிறை வோங்கத் தெருள்நிலை விளங்கப் புண்ணியம் பொற்புற வயங்க அருள் நயந்து அருள்வாய்” எனப் புகல்கின்றார். மக்களிடையே பொருள் நிறைவும் மனத் தெளிவும் திருவருளால் உளவாதல் பற்றி, “அருள் நயந் தருள்வாய்” என்று வேண்டுகின்றார் திருச்சிற்றம்பலத்தில் காட்சி தரும் சிவ வுருவம் அருட் டிருமேனியாதலாலும், அதனிடத்தே ஞானவொளி திகழ்தலாலும் அதனை “அருட் பெருஞ் சோதி” எனத் தெரிவிக்கின்றார். சுத்த சன்மார்க்கத்திற் குரிய ஞானமும் நல்லொழுக்கமும் தாம் காண நிலவுதல் கண்டு வடலூர் வள்ளல், “தருணம் இஞ்ஞான்றே” என வற்புறுத்துகின்றார்.
இதனால், சன்மார்க்கர் உள்ளம் களிக்கவும், சுத்த சன்மார்க்கம் எங்கும் திகழவும் இது தருணமாதலின் அருள் செய்க என வேண்டியவாறாம். (18)
|