3758.

     என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
          றிருள்இர வொழிந்தது முழுதும்
     மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
          மங்கல முழுங்குநிகின் றனசீர்ப்
     பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
          பூவையர் புணர்ந்திடப் போந்தார்
     சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
          துலங்கவந் தருளுக விரைந்தே.

உரை:

     என் மனமாகிய மலையில் மேல் அருளொளி எழுந்துளது; இருள் செய்யும் இரவுப் பொழுது முற்றவும் ஒழிந்தது; நிலைபெறுகின்ற எனது இதயத் தாமரையும் மலர்ந்து விட்டது; நல்ல மங்கல இசைகளும் முழங்குகின்றன; சிறப்புடைய பொன் போன்ற விளங்கும் ஒளி எங்கும் பரந்தது; சித்திகளாகிய மகளிர் என்னைச் சேர்ந்திட வந்துள்ளார்; ஞானப் பேற்றிற்குரிய நல்ல நேரமும் வந்துள்ளது; அருட் பெருஞ் சோதி விளங்க என்பால் விரைந்து வந்து அருள் செய்க. எ.று.

     திருவருள் ஞானம் சிந்தைக்கண் தோன்றி நிற்பதை யுணர்த்தற்கு, “என்னுள வரை மேல் அருளொளி ஓங்கிற்று” என்றும், இதுகாறும் அறிவின்கண் பரவியிருந்த மலவிருள் நீங்கினமை புலப்படுத்தற்கு, “இருள் இரவு முழுதும் ஒழிந்தது” என்றும் கூறுகின்றார். சிந்தையின்கண் திருவருள் ஞானச் சூரியன் எழுந்ததும், உயிரறிவில் பரந்திருந்த மலவிருள் நீங்கினதும் இதனால் தெரிவிக்கின்றார். இரவிருள் நீங்கினதும் ஞானச் சூரியன் எழுந்ததுமாகிய இந்நற்காலையில் மனமயக்கம் நீங்கி ஞான ஒளியால் இதயம் மலர்ந்தது என்றற்கு, “மன்னுறும் இதயம் மலர்ந்தது” என உரைக்கின்றார். விடியற் காலையில் மங்கல இசை முழங்குவது போலச் சிவனது திருநாம முழக்கம் உள்ளத்தில் எழுந்தமை புலப்படுத்தற்கு, “நன்மங்கலம் முழங்குகின்றன” என உரைக்கின்றார். அறிவெல்லை முழுவதும் திருவருள் ஞானச் சூரியனது பொன்னொளி விரிந்து நிற்கின்றது என்பாராய், “பொன் இயல் விளக்கம் பொலிந்தது” என மொழிகின்றார். எல்லாம் செயல்வல்ல சித்திக்குரிய அருட் சத்திகள் வந்து சூழ்ந்து நின்றதை உணர்த்துதற்கு, “சித்திப் பூவையர் புணர்ந்திடப் போந்தார்” எனப் புகல்கின்றார். அருட் பெருஞ் சோதியைப் பெறுதற்குக் குறித்த நல்ல நேரமாகலின் விரைந்து எழுந்தருளி அதனை நல்கி யருளுக என வேண்டுகின்றாராகலின், “சொன்ன நற்றருணம் அருட் பெருஞ் சோதி துலங்க வந்தருளுக விரைந்தே” என்று மொழிகின்றார்.

     இதனால், அருட் பெருஞ் சோதியைப் பெறுதற்குரிய தருணம் வாய்க்கும் போது மனத்தின்கண் அருளொளி எழுதுவதும், மலவிருள் நீங்குவதும், இதயத் தாமரை விரிவதும், சிவநாம ஓசை பரவுவதும், அருட் சத்திகள் வந்து கூடுவதும் எடுத்தோதியவாறாம்.

     (19)