3759.

     வந்தருள் புரிக விரைந்திது தருணம்
          மாமணி மன்றிலே ஞான
     சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
          சுத்தசன் மாரக்கசற் குருவே
     தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
          தனிஅருட் சோதியை எனது
     சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
          செய்வித் தருள்கசெய் வகையே.

உரை:

     பெரிய மணிகள் இழைத்த அம்பலத்திலே அழகிய ஞான வடிவுடைய சோதியாய் விளங்குகின்ற சுத்த சன்மார்க்கத்தை யுணர்த்தும் சற்குருவாகிய பெருமானே; இது சமயமாதலின் விரைந்து வந்தருள்க; நல்வரங்களைத் தந்தருளுக; எல்லாம் வல்லதாகிய அருட் சோதியை என் மனத்தின்கண் சேர்ப்பித்து என் உயிரோடு கலந்து யான் செயல் வகைகளைச் செய்வித்தருள்க. எ.று.

     அம்பலத்தில்கண் அழகிய கூத்தப் பெருமானாய்த் தோன்றி ஞானவொளி திகழும் சன்மார்க்க நெறிக்குறிய குருமுதல்வனாதல் விளங்க, “மாமணி மன்றின் மேல் ஞானச் சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே” என்று துதிக்கின்றார். திருவருள் ஞான ஒளியாகிய ஒப்பற்ற அருட் சோதியை நல்குதற்குப் பக்குவம் நிறைந்துள்ள இக்காலம் ஏற்றதாகலின் போந்தருளி நல்வரங்களைத் தருக என விண்ணப்பம் செய்யுமாறு விளங்க, “வந்தருள் புரிக விரைந்து இது தருணம்” என்றும், “வரம் தந்தருள் புரிக” என்றும் முறையிடுகின்றார். அருள் ஞானம் பெற்ற பின் யான் செய்தற்குரியவற்றைச் செய்தற் கேற்ற நெறியை ஏற்று என் உயிருணர்வில் கலந்து என்னொடும் கலந்து தெரிவித்தருள்க என்பாராய், “எல்லாம் வல்ல அருட் பெருஞ் சோதியை எனது சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்துவித்து அருள்க செய்வகையே” என மொழிகின்றார்.

     இதனால், அருட் பெருஞ் சோதி எல்லாம் செய்யும் வன்மையை நல்குவது என்பது தெரிவித்தவாறாம்.

     (20)