28. திருவருட் புகழ்ச்சி

    அஃதாவது, சிவஞானத் திருவுருவாகிய திருவருளையும் அதனால் விளையும் நலங்களையும் எடுத்தோதிப் புகழ்தல்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3760.

     திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
          திருவருளாம் பெருஞ்சோதி திருஉருக்காட் டாயோ
     உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
          ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
     கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
          கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
     செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
          சித்தரிகா மணியேஎன் திருநடநா யகனே.

உரை:

     போரை விரும்பாதவர்களுக்கு அருள் புரியும் சித்தி புரத்தில் எழுந்தருளுகின்ற அருளரசே; சித்தர்களுக் கெல்லாம் முடிமணியாய் விளங்குபவனே; திருமிக்க நடம் புரியும் நாயகனே; அறிவை மறைத்து இருள் செய்யும் பாசத் திரைகள் எல்லாம் நீக்கித் திருவருளாகிய பெரிய சோதியை யுடைய நினது திருவுருவைக் காட்ட மாட்டாயோ; மனதை யுருக்கி அமுதம் ஊற்றெடுத்தூற, உடம்பையும் உள்ளத்தையும் உயிரையும் ஒளிமயமாக ஆக்குமாறு மெய்யுணர்வை அருள மாட்டாயோ; பிறவிச் சூழலை நினைக்க வொண்ணாத ஒப்பற்ற வடிவை யுடைய பெருமானே; என் உள்ளத்தில் நின்னைக் கலந்து இரவு பகலின்றி என்றும் இன்பம் துய்த்திடச் செய்ய மாட்டாயோ. எ.று.

     இறைவன் திருவுருவை ஞானத்தால் கண்டு மகிழ்வார்க்கு மீளப் பிறந்திறந்துழலும் பிறவியை விரும்பும் மனநிலை உண்டாகாதபடி அவனுடைய ஞான வின்ப வடிவம் விளங்குதலின், “கருக் கருதாத் தனி வடிவோய்” என்றும், உயிர்களைக் கொன்று ஒழிக்கும் போர் வகைகளை விரும்பாத அருளாளர்க்கு அருள் புரிவது பற்றி, “செருக் கருதாதவர்க்கருளும் சித்தி புரத் தரசே” என்றும், ஞான சித்தர்களின் முடிமணியாதல் பற்றிச் சிவபெருமானை, “சித்த சிகாமணியே” என்றும், உயிர்கள் உடம்பெடுத்து வாழ்தற் கேதுவாகிய ஊன நடனத்திற்கும் பிறவாப் பேறாகிய ஞான வாழ்வு வாழ்வதற்கேற்ற ஞான நடனத்திற்கும் தலைவனா பற்றிக் கூத்தப் பெருமானை, “திருநட நாயகனே” என்றும் போற்றுகின்றார். உயிரறிவை மல மாயை கன்மங்களாகிய திரைகள் மறைத்தலின் அவற்றை நீக்கி ஞான நாட்டமாகிய கதவைத் திறந்தாலன்றி, திருவருள் ஞானமாகிய பெரிய ஒளி நிறைந்த இறைவனது திருவுருவம் காண்டற்கியலாதாகலின், “திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் தவிர்த்துத் திருவருளாம் பெருஞ் சோதித் திருவுருக் காட்டாயோ” என்று வேண்டுகின்றார். உடம்பும், உயிரும், உள்ளமும் ஆகிய இவற்றை யுருக்கி ஞானமாகிய அமுதத்தைப் பெருகச் செய்த வழி, உயிர் நின்ற உடம்பு ஞானப் பேரொளி மயமாய் ஆகுமென்றும், அதற்கு மெய்யுணர்வு ஏதுவாகுமென்றும் கூறுவாராய், “உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடும் ஒளி மயமே ஆக்குற மெய்யுணர்ச்சி அருளாயோ” என்று உரைக்கின்றார். ஞான நாட்டம் பெற்றுச் சிவயோகம் உற்றுச் சிவபோகத்தில் கலக்கின்ற பொழுது, சிவானந்த போக நிலை மாயா மண்டலத்திற்கு அத்தமாகலின் அங்கு மாயா வுலகத்தில் நிலவும் இரவும் பகலும் இல்லையாதல் பற்றி, “நின்னை என்னுட் கலந்து கங்குல் பகலின்றி என்றும் களித்திடச் செய்யாயோ” என வேண்டுகின்றார். “ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உவப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே” என மணிவாசகர் உரைப்பது ஈண்டு நினைவு கூறத் தக்கதாம். செரு - சொற்போரும் மற்போருமாகிய பலவகைப் போர் வகைகள். அவற்றால் பகையும் உயிர்க் கொலையும் நிகழ்தலின் அவற்றை எண்ணாத அருட் செல்வர்களை, “செருக்கருதாதவர்” எனத் தெரிவிக்கின்றார். சித்தி புரம் - இந்நாளில் வடலூர் என வழங்கப்படுகிறது.

     இதனால், மெய்யுணர்வால் ஞான நாட்டம் பெற்றுச் சிவயோகத்தால் சிவத்தைக் கண்டு அதனோடு கலந்து மகிழ்ந்திருக்கும் சிவயோக நிலை விளக்கப்பட்டவாறாம்.

     (1)