3762. உரைகடந்த திருவருட்பேர் ஒளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடியாது
கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
உரை: மலமறைப்புகளைப் போக்கிய குருமணியே; சிவஞான மணியே; சித்த சிகாமணியே; திருநட நாயகனே; வாக்கின் எல்லையைக் கடந்த திருவருளாகிய பெரிய உள்ளொளி வடிவைக் கூறி உவட்டுதலில்லாத பெரிய சிவபோக நுகர்ச்சி ஓங்கி மிகும் பொருட்டு என்
உள்ளத்தே காதல் பெருவெள்ளம் எழுந்து பொங்கி வழிந்து என்னை முற்றும் விழுங்கிக் கொண்டு கரை கடந்து போனபடியால் இனி என்னால் அதனைத் தாங்க முடியாத நிலையை நீயே என் கருத்தின் இயல்பு நோக்கிக் கண்டு கொள்வாயாக. எ.று.
திருவருள் ஒளி மயமானதால் அந்த அருள் உருவாகிய சிவத்தின் வடிவைத் “திருவருட் பேரொளி வடிவு” என்றும், ஞானக் கண்ணிற்குப் புலப்படினும் வாக்கின் எல்லைக்கு அப்பாற் பட்டதாகலின், “உரை கடந்த திருவருட் பேரொளி வடிவு” என்றும் உரைக்கின்றார். அதனைக் கூடிக் கலந்த வழி உளதாகும் பெரிய சிவபோகம் நுகருந் தொறும் தெவிட்டாத சீர்மை யுடையதாகலான், “உவட்டாத பெரும் போகம்” என உரைக்கின்றார். அந்தப் போக நுகர்ச்சிக்கண் எழுந்த ஞானக் காதல் வடலூர் வள்ளலின் திருவுள்ளத்தின் எல்லையைக் கடந்து பொங்கி எழுந்து அவருடைய உணர்வு முற்றும் கவர்ந்து கொண்டமை புலப்பட, இறை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கித் ததும்பி என் காதல் பெருவெள்ளம் என்னை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போனது” என்று கூறுகின்றார். அதனை அடக்கும் மனவன்மை தம்பால் இல்லை என்பது புலப்பட, “இனித் தாங்க முடியாது என் கருத்தின் வண்ணம் நீயே கண்டு கொள்வாய்” என உரைக்கின்றார். கருத்தின் வண்ணம் - மனத்தின் தன்மை. இரை என்பது ஈண்டு இருப்பிக்கும் எல்லை குறித்து நின்றது.
இதனால், சிவபோகம் நுகர்தற் பொருட்டுத் தம் உள்ளத்தில் எழுந்த காதல் பொங்கிப் பெருகித் தன்னை முற்றவும் விழுங்கிக் கொண்டதனால் அதன் வேகத்தைத் தாங்க முடியாத நிலைமையினை வடலூர் வள்ளல் எடுத்தோதுகின்றாராம். (3)
|