3763.

     உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
          உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
     அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
          அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
     என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
          என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
     தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
          சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

உரை:

     தென் திசை நோக்கி அம்பலத்தில் நின்றாடும் பெருமானே; சித்த சிகாமணியே; திருநடம் புரியும் நாயகனே; பிறர் போல உன்பால் நான் உடுக்கும் உடை வேண்டுமென விரும்பினேனா; உண்ணும் உணவு வேண்டுமென விரும்பினேனா; வேறே உடைமைகள் வேண்டுமென இருக்கின்றேனா; அன்புடையவனாகிய நீ என்னைச் சேர்தல் வேண்டுமென்றன்றோ விழைவுற்றேன்; ஐயோ, என் ஆசைப் பெருக்கு அணை கடந்துற்றதாதாலால் அருளரசாகிய நீ என்பால் வந்து என்னைக் கூடுதல் வேண்டுமென இயம்புகின்றேன்; உலகியல் மக்கள் யாது சொல்லினும் சொல்லுக; நாணம் அச்சம் முதலிய பண்புகளை விட்டொழித்தேன்; எனக்கு அருள் புரிக. எ.று.

     உலகியல் வாழ்வுக்கு இன்றியமையாத உண்டி உடை வேறு உடைமைகள் வேண்டுவோர் தம் உண்மை முயற்சியால் பெற வேண்டும் அல்லது வள்ளன்மையுடைய பெருஞ் செல்வரை அடைந்து பெற வேண்டுமே யன்றி உன்னை வேண்டுதல் வேண்டாச் செயலாம்; ஆதலால் அவை குறித்து நான் உன்னை விழைகின்றேனில்லை என்பார், “உன்புடை நான் பிறர்போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ” என்று உரைக்கின்றார். தான் வேண்டுவது இதுவென வற்புறுத்தற்கு “அன்புடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன்” என்று கூறுகின்றார். இறைவனுடைய அருட் கூட்டத்தின்பால் தமக்கு உளதாகிய ஆசைப் பெருக்கினை விளக்குவாராய், “என் ஆசை வெள்ளம் அணை கடந்தது அரசே என்புடை வந்தணைக என இயம்புகின்றேன்” என மொழிகின்றார். என் வேண்டுதல் கண்டு உலகில் வாழும் என் போன்றார் என்னை எள்ளி இகழ்ந்தாராயினும் அதற்கு நாணி உள்ளம் சுருங்கமாட்டேன் என வற்புறுத்தற்கு, “உலகோர் என்சொலினும் சொல்லுக என் இச்சையெல்லாம் ஒழித்தேன்” என்று தெரிவிக்கின்றார். தென்புடையோர் முகம் என்றது தென்திசை, திருச்சிற்றம்பலத்தைத் “திருப் பொது” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதனால், இறைவனது திருவருட் கூட்டத்தின்கண் வடலூர் வள்ளலுக்கு எழுந்துள்ள ஆசை மிகுதி எடுத்துரைத்தவாறாம்.

     (4)