3764.

     இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
          இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
     புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
          பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
     பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
          பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
     திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
          சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

உரை:

     ஞானசபையில் வாழ்கின்ற பெருமானே; சித்த சிகாமணியே; திருநடம் புரியும் நாயகனே; முன்னைப் பிறவிகளில் இறந்திறந்து இளைத்து மெலிந்த துன்பமெல்லாம் போதும்: இனிவேண்டாம்; இந்த உடம்பே அழியாத இயற்கை உடம்பாகும்படி திருவருளாகிய அமுதத்தை நல்கி என் புற வுடம்பைத் தழுவி அகத்தே புகுந்து என் உணர்வொடு கலந்து கொண்டு சிவபோகத்தை எந்நாளும் பெற்று இன்பம் பொங்கி மகிழ விரும்புகின்றேன்: பல காலமாக உலகிற் பிறந்தும் இறந்தும் நற்கதியைப் பெற நினைந்து ஏமாந்த அறிவில்லாத மக்களைப் போல என்னை நினைத்தல் கூடாது; பெருமை பொருந்திய மாயையாகிய திருக்கதவைத் திறந்து என்னைக் கூடுவதை வேண்டுகிறேன். எ.று.

     சிற்சபை - ஞானசபை. ஞான சபையில் என்றும் இருந்து நடம் புரிவது பற்றிக் கூத்தப் பெருமானை, “சிற்சபை வாழ் அரசே” என்று சிறப்பிக்கின்றார். கடந்த பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் மரண நோயுற்று என் உயிரைத் தாங்கும் உடல் இளைத்து மெலிந் தொழிந்தது; இனி யேனும் இந்த உடம்பு மரணவாதனைக் குள்ளாகி மெலியாதவாறு இயற்கை உடம்பாகுமாறு நினது திருவருளாகிய இனிய அமுதத்தை நல்குதல் வேண்டும் என்பாராய், “இறந்து இறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பாக அருள் இன்ன முதம் அளித்து” என இயம்புகின்றார். இயற்கை உடம்பு என்பது புரியட்டக தேகம் எனப்படும். தன் மாத்திரை ஐந்தும், மனம், சித்தம், புத்தி மூன்றுமாகிய எட்டும் கூடிய நுண்ணுடம்பு. அருளமுதம் தருவதோடு நில்லாது இப்புற உடம்பையும் தாண்டி அகவுடம்பாகிய புரியபட்டகத்தில் கலந்து சிவபோகத்தை நல்குதல் வேண்டும்; அதனால் நான் இன்பம் அடைய வேண்டும் என்பார்; “புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவபோகம் பொங்கியிட” என்று புகழ்கின்றார். சிவபோகம் என்றும் குறைவிலா நிலைவாய் இருப்பதாகலின் அதனை, “பூரணமாம் சிவபோகம்” எனப் புகழ்கின்றார். உலகியல் மக்கள் பிறப்புக்களில் கிடந்து உழலுவது முடிவில் பிறவாப் பெருநிலையைப் பெறலாம் எனக் கருதி ஞான நலம் பெறாது மேலும் மேலும் அப் பிறப்புக்களையே பெற்று உழலுவது பற்றிக் கூறுவாராய், “பிறந்திறந்து போய்க் கதியைப் பெற நினைந்து அதற்குரிய திருவருள் ஞானத்தை அறிந்து பெறா தொழிந்தமை பற்றிப் பிறவிச் சூழலில் கிடந்து மயங்குகின்ற மக்களை “கதியைப் பெற நினைந்து ஏமாந்த பேதையர்” என்று குறிக்கின்றார். உயிரறிவை மறைத்து உண்மை ஞானத்தைப் பெறாவாறு தடுத்து நிற்கும் உலகியல் மாயை ஈண்டுப் “பெரிய திருக்கதவம்” எனப்படுகிறது. மாயா காரிய மறைப்பினின்றும் நீங்கினாலன்றித் திருவருட் பேறு எய்தாமை விளங்க, “பெரிய திருக் கதவம் திறந்து அருளி அணைந்திடுவாய்” என்று முறையிடுகின்றார்.

     இதனால், அழியா நுண்ணுடம்பு பெற்றுச் சிவபோகம் துய்த்திட எழுந்த தமது விழைவை வடலூர் வள்ளல் எடுத்தோதியவாறாம்.

     (5)