3765. பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடைஎன் னொடுகூடி ஆட எழுந் தருள்வாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
உரை: சித்தர்களுக் கெல்லாம் முடிமணியாய் விளங்குபவனே; திருநடம் புரிகின்ற நாயகனே; படத்தையுடைய பாம்பை ஒப்பவரோடும் கூத்தாடுகின்றவனே; என்னுடைய குணஞ் செயல்களை அறிந்து என்பால் நட்பு வைத்த பண்புடையவனே; பொய் யொழுக்கமுடையவர் விரும்புகின்ற நட்பை நான் விரும்பியதில்லை; பூணாரங்களை அணிந்து கொள்ளவும் நான் விரும்பியதில்லை; தேவர்கள் வாழும் வானுலகக் காட்சியையும் கூட நான் விரும்பியதில்லை; மெய்ம்மை யுடையவனே; நான் உன்னோடு விளையாடவே விரும்பினேன்; விளையாட்டென்பது சிவஞானத்தை விளைவிக்கும் விளையாட்டாகுமாதலால், இப்பொழுது நற்செய்கைகளையுடைய என்னோடு கூடி ஞான விளையாட்டு ஆடுதற்கு எழுந்தருள்வாயாக. எ.று.
பையுடைப் பாம்பு - படத்தையுடைய நல்லபாம்பு. இங்கே பாம்பனையா ரென்றது பாம்பின் காலையுடைய பதஞ்சலி முனிவரை. தில்லையம்பலத்தின்கண் அம்முனிபுங்கவர் கண்டு மகிழ்ந்தாட ஆடுகின்றாராதலால், “பாம்பனையரோடும் ஆடுகின்றோய்” எனப் பகர்கின்றார். பாம்பு போல நெஞ்சில் கரவு உடையவரோடும் கலந்து உறைகின்றாராதலால் சிவனை இவ்வாறு கூறுகின்றார். எனினும் அமையும். எனது குணஞ் செயல்களை நன்கறிந்து என்னோடு நட்புக் கொண்டாய் என்பாராய், “எனது பண்பறிந்து நண்பு வைத்த பண்புடையோய்” என்று புகழ்கின்றார். பொய் ஒழுக்கமுடையவர்கள் நாடுகின்ற நட்புறவு ஞானப் பேற்றிற்குத் தடையாதலை எண்ணி நான் அவர்களுடைய நட்பை விரும்பினதில்லை என்பாராய், “பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ” எனப் புகல்கின்றார். புணர்ச்சி - நட்பு. உலகியலில் பெறப்படும் பொன்னாலும் மணியாலுமாகிய பூணரங்கள் உலகியற் போக நுகர்ச்சிக் கண் கருத்தைச் செலுத்துவனவாதலால் அவற்றை நான் விரும்புவதில்லை என்றற்கு, “பூண, விழைந்தேனோ” என்றும், தேவருலக போகமும் முடிவின் கண் மண்ணுலகில் பிறத்தற்கே ஏதுவாதலால் அதனையும் நான் நாடவில்லை என்பாராய், “வான் காண விழைந்தேனோ” என்றும் இயம்புகின்றார். சத்தாகிய பரம்பொருளாதலின் சிவபெருமானை, “மெய்யுடையாய்” என்று பாராட்டி உன்னுடைய திருவருளில் கலந்து மகிழ விரும்புவேனாயினேன் என்பாராய், “என்னொடு நீ விளையாட விழைந்தேன்” என உரைக்கின்றார். சிவனொடு கூடி விளையாடுவது என்பது சிவஞானச் செயல்களில் ஈடுபடுவது என விளக்குதற்கு, விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே” என விளம்புகின்றார். செய், முதனிலைத் தொழிற் பெயராய் செயல்கள் மேல் நிற்கிறது. சிவஞானப் பேற்றிற்குரிய செயல்களையே மேற்கொண்டு ஒழுகுகின்றேனாதலால், என்னொடு கூடிச் செய்யும் விளையாட்டு சிவஞானத்தைப் பயப்பது மெய்ப்மையாதல் பற்றி, “என்னோடு கூடி ஆட எழுந்தருள்வாய்” என வேண்டுகின்றார்.
இதனால், சிவஞானப் பேறு குறித்துத் தன்னொடு கலந்து ஞான விளையாட்டைப் புரியுமாறு சிவபெருமானை வேண்டியவாறாம். (6)
|