3767. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
உரை: சித்தர்களின் முடிமணியாய் ஞான நாடகம் புரிகின்ற தலைவனே; வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய இவை யனைத்தும் ஓதுகின்ற சூதுகளையும் உளவுகளையும் யான் அறியச் செய்து உண்மையை உள்ளவாறு உணர்ந்து கொள்ள எனக்கு உரைத்தருளினாய்; யானும் அவற்றைத் குற்றமற உணர்ந்து கொண்டேன்; அதனால் வீண்பொழுது போக்குதற்கு யான் எள்ளத்தனையும் நினைப்பதில்லேன்; ஆகவே நீ என்னோடு கூடிக் குற்றமனைத்தும் நீங்க ஞானத் திருவிளையாடலைப் புரிந்தருளுக. எ.று.
வேதங்களும், ஆகமங்களும், புராணங்கள், இதிகாசங்கள் வேறு வேறு நெறிகளை உரைப்பதும், அவை ஒன்றிலொன்று வேறுபட்டும் மாறு பட்டும் இருப்பதும் பற்றி, “வேத நெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி” என எடுத்துரைக்கின்றார். சூது - உண்மைக்கு மாறாய் உண்மை போலத் தோன்றுமாறு உரைப்பது; உளவு தந்திர உரை. சூதுகளையும் உளவுகளையும் தாம் தெளிய உணர்ந்து கொண்டமை புலப்பட, “உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே” எனப் பகர்கின்றார். சிவனருளாலன்றி உள்ளதன் உண்மையை உள்ளவாறு அறிய முடியாமை பற்றி, “உள்ளபடி உணர உரைத்தனை” என்று உரைக்கின்றார். திருவருள் துணையால் தாம் மேற்கொண்ட சூதுகளையும் உளவுகளையும் கசடறக் கற்றுணர்ந்தமை தோன்ற, “ஏதமற உணர்ந்தனன்” என்றும், அதனால் வாணாளை வீணே கழிப்பதற்கு எண்ணமில்லா தொழிந்தமை விளங்க, “வீண் போது கழிப்பதற்கோர் எள்ளவும் எண்ணமிலேன்”என்றும் இயம்புகின்றார். சிவபெருமானுடைய திருவருளோடு கலந்தவிடத்து நல்லன வெல்லாம் செய்தற்கு வன்மையுண்டாதலால், “என்னொடு நீ புணர்ந்தே தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்” என்று செப்புகின்றார். என் செயலென ஒன்றுமில்லை செய்வன யாவும் நின் செயலே என உரைப்பாராய், “அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்” என்று தெரிவிக்கின்றார்.
இதனால், இறைவனைத் தன்னொடு கலந்து தான் செய்தற்குரிய ஞானச் செயல்களைப் புரிந்தருளுமாறு வேண்டியவாறாம். (8)
|