3768.

     கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
          கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
     மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
          வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
     உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
          உணர்த்தினைவந் தனைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
     சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருஅமுதம் அளித்தோய்
          சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

உரை:

     சித்தர்களின் முடிமணியாய் ஞான நடம் புரியும் நாயகனே; மெய்ம்மையை யுணர்த்திக் கல் போன்ற என் மனத்தையுருக்கி ஞான வமுதத்தை அளித்த பெருமானே; கலைஞர்கள் தம்முடைய கற்பனையால் உரைத்தவற்றை மெய்ம்மை உரை யெனக் கொண்டு நிலவும் மூட வழக்கங்கள் எல்லாம் மண்ணிற் புதையுண்டு ஒழியவும், ஐயத்திற் கிடமில்லாத சன்மார்க்க நெறி ஒன்றே நிலை பெறவும், மெய்ந்நெறியில் உலகத்தவர் வாழ்ந்தோங்கவும் திருவுள்ளம் கொண்டு எனக்கு நினது திருவருள் ஞானத்தை வழங்கி யருளினாய்; கலக்கமில்லாத இந்தக் காலம் நல்ல தருணம் என்று நீயே எனக்கு உணர்த்தி என்பால் வந்தணைந்து அருள் செய்வாயாக. எ.று.

     கலைஞர்கள் தங்கள் மனக் கற்பனையால் கற்பித் துரைத்த கற்பனை உரைகளை, “கலை யுரைத்த கற்பனை” என்று கூறுகின்றார். கற்பனைகள் மெய்ம்மை யாகாவாதலை உணராது மெய் யெனக் கொண்டொழுகும் பொய்யொழுக்கத்தை, “நிலை யெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கம்” எனப் பழிக்கின்றார். இல்லது பொருளாக இல்லது கூறலும், இல்லது பொருளாக உள்ளது கூறலும் உள்ளது பொருளாக இல்லது கூறலும், உள்ளது பொருளாக உள்ளது கூறலும் எனக் கலைஞர்கள் கூறும் கற்பனைகள் பலவகையாய் உண்மை தெளியுமிடத்து நிலையின்றிக் கெட்டொழிதலின் அவற்றை உண்மையறிவு இல்லாமையால் மெய்யெனக் மயங்குவது கண்டு வடலூர் வள்ளல் மனம் வருந்துமாறு தோன்ற, “கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம்” என்றும், கண்மூடி வழக்கங்களால் மக்களுலகம் அறியாமை இருளில் அழுந்தி அல்லலுறுவது பற்றி அவ்வழக்கங்கள் அத்தனையும் கெட்டொழிதல் வேண்டும் என மனம் சலித்து உரைக்கின்றாராதலின், கருதி உலகவர் “மண்மூடிப் போக” என்றும் உரைக்கின்றார். மெய்ந் நெறியைச் சன்மார்க்க எனவும், எவ்வகையால் ஆராயினும் அதன் மெய்ம்மை ஒளி குன்றாமை தோன்ற, “மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற” எனவும், அதனால் உலகவர் வேற்றுமையின்றி ஆன்ம நேயம் உடையவராய் இனிது வாழ்ந்து மேன்மை எய்துவர் என்னும் கருத்தால், “மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய்யுலகம் வாழ்ந் தோங்கக் கருதி” எனவும், அவ்வுணர்வு தமக்கு இறைவன் அருள வந்தது என்பது புலப்பட, “என்றனுக்கே அருள் வழங்கினை” எனவும் இயம்புகின்றார். உலக மக்கள் உண்மை யுணரும் பக்குவம் எய்துவது கண்டு அதனை அவர்களுக்கு உணர்த்துதற்குத் துணை புரிதல் வேண்டும் என இறைவனை வேண்டுவாராய், “உலைவறும் இப்பொழுதே நல்தருணம் என நீயே உணர்த்தினை வந்தணைந்து அருள்வாய்” என வேண்டுகிறார். உணர்த்தினை - முற்றெச்சம். உண்மையை உள்ளவாறு உணரும் திறம் இறைவன் அருள் ஞானத்தாலன்றி எய்தாமை பற்றி, “உண்மை உரைத்தவனே” என்றும், கற்பனை உணர்வாலும், கண்மூடி வழக்கங்களாலும் கல்லாகி விட்ட மனத்தை உருக்கி உண்மை ஞானம் பெற இறைவன் அருளிய நலத்தை, “சிலை நிகர் வன்மனம் கரைத்துத் திருவமுதம் அளித்தோய்” எனத் தெரிவிக்கின்றார். சிலை - கல். திருவமுதம் - திருவருள் ஞானம்.

     இதனால், திருவருள் ஞானம் அளித்து இறைவன் உண்மை யுணர்வு நல்கிய திறம் எடுத்தோதியவாறாம்.

     (9)