29. சிற்சபை விளக்கம்

    அஃதாவது, வடலூர் ஞானச் சபையில் எழுந்தருளும் கூத்தப் பெருமான் திருமுன் வடலூர் வள்ளலார் தமது உள்ள விருப்பத்தை விளங்க உரைத்தல்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3770.

     சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
          சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
     வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
          மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
     மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
          வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
     சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
          சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

உரை:

     தேன் பொருந்திய சோலைகள் நிறைந்த வடலூர்க்கண் எழுந்தருளும் அருளரசே; அங்குள்ள சத்திய ஞான சபைக்குரிய ஒப்பற்ற பெரிய தலைவனே; உண்ணும் சோற்றை விரும்பினும், ஆடை அணிகள் முதலிய சுகப் பொருட்களை வேண்டினும், சுகமே யன்றிச் சுகத்தைத் தருகின்ற வேறு பொருட்களை வேண்டினும் நின்னுடைய திருவருளை அடைந்தாலன்றி எய்த வொண்ணாது என்னும் சான்றோருடைய நன்மொழிக்கு மாறாக ஒன்றும் வேண்டாது நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; யானோ வள்ளற் பெருமானாகிய உன்னுடைய திருவுள்ளக் குறிப்பை அறியேன்; ஆதலால் எனக்கு உன் திருவருள் வேண்டப்படுகிறது காண். எ.று.

     சாறு - ஈண்டுப் பூக்களிலிருந்து சொரியும் தேன். சோலைகளிலுள்ள மலர்களில் ஊறிப் பெருகும் தேனைச் சிறப்பித்து, “சாறு வேண்டிய பொழில்” என உரைக்கின்றார். வடலூர் வடல் என மருவி நிற்கின்றது. இதனை வடலூர் என்பது போல, பார்வதி புரம் என்பதும் வழக்கு. இவ்வடலூரின்கண் அமைந்துள்ள சத்திய ஞான சபையைச் “சத்தியச் சபை” என்றும், அங்கே எழுந்தருளும் கூத்தப் பெருமான் உலகிற்கு ஒப்பற்ற பெரிய தலைவனாதல் பற்றி, “தனிப் பெரும் பதி” என்றும் புகழ்கின்றார். துகில் - உடுக்கும்உடை. அணி - பூணாரங்கள். சோறும் உடையும் அணிகலன்களும் மக்கட்கு இன்பம் தருவனவாதலின், அவை வேண்டபடுவது பற்றி, “சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும்” எனத் தொடுத்து மொழிகின்றார். இவற்றால் விளைவது சுகம் என்பது பற்றி, “சுகம்” என்றும், இவற்றோடு சுகம் தரும் வேறு பொருட்களும் உலகில் உளவாதல் பற்றி, “சுகமலால் சுகமாம் வேறு வேண்டினும்” என விளம்புகின்றார். உண்ணும் உணவும், உடுக்கும் உடையும், அணிந்து கொள்ளும் ஆபரணங்களும், இருக்கும் இடமும் பிற நன்பொருட்களும் இறைவன் திருவருளால் அல்லது பெறலாகாது என்று பெரியோர் உரைக்கும் மெய்ம்மை உரையை, நினை அடைந்தன்றி மேவ ஒணாதெனும் மேலவர் உரை” என்று எடுத்துரைக்கின்றார். மேலவர் - சிவஞானச் செல்வர்களாகிய மேலோர்; திருவருட் செல்வர்கள் எனினும் பொருந்தும். திருவருளை முன்னிட்டல்லது யான் யாதும் வேண்டுகின்றேனில்லை; அத்திருவருளை வேண்டியே நின்னுடைய திருமுன் வந்து நிற்கின்றேன்” என்று மொழிகின்றார். உனது திருவருளையே வேண்டுகின்றேன் என்றாலும் உனது திருவுளக் கருத்து இன்னும் அறிந்திலேன் என்பாராய், “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” என வுரைக்கின்றார். நினது திருவருள் இருந்தாலன்றி வேண்டுவார் வேண்டுவது எய்தாது என்ற கருத்தைத் தான் மறவாது உள்ளத்தில் கொண்டிருப்பதை, “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” என வற்புறுத்துகின்றார்.

     இதனால், உலகில் மக்கட்கு உணவும், உடையும், உறைவிடமும் பிற யாவும் இறைவன் திருவருளாலன்றி எய்துவதில்லை என்பது தெரிவித்தவாறாம்.

     (1)