3771.

     எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
          இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
     வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
          வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
     அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
          அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
     தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
          சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

உரை:

     சத்திய ஞான சபையையுடைய ஒப்பற்ற பெரிய தலைவனே; தஞ்சம் என்று வந்ததவர்கட்கு அருள் ஞானம் வழங்கும் வடலூர் அருளரசே; ஐயனே; குறைதலில்லாத துயரத்தாலும் இடர்களாலும் நெருக்குண்டு நின்னுடைய இனிய திருவருளை விழைந்து வஞ்சம் நிறைந்த நெஞ்சினை யுடையவனாகிய யான் நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; அருள் வள்ளலாகிய உனது திருவுள்ளம் யாதோ அறிகிலேன்; ஆயினும் அஞ்சுதல் ஒழிக என்று சொல்லி என்னை அருளி ஆட்கொள்ள வேண்டும்; எனக்கு அப்பனாகிய உன்னையன்றி உலகில் வேறு ஒரு பொருளையும் அறியாதவனாவேன். எ.று.

     தஞ்சம் - புகல்; வேறு பற்றுக் கோடு ஒன்று மில்லாதவர் தமக்குப் பற்றாதல் வேண்டுமென முறையிடும் மொழி தஞ்சம் என வழங்குவது, புகலடைதல் என்பதும் உண்டு. ஆதரவின்றி அல்லலுற்று வருந்தும் எளிமை நிலையைத் தஞ்சம் என்னும் சொல் உணர்த்தும் என்பர் தொல்காப்பியர். பற்றற்றவர்க்குப் பற்றாய பெருமான் என்று சான்றோர் இறைவனைப் பாராட்டுதலால், “தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே” எனப் போற்றுகின்றார். உலகியல் வாழ்வில் துன்பமும் துயரும் இடையீடின்றிப் பெருகி வருத்துவது பற்றி, “எஞ்சல் இன்றிய துயர்” என எடுத்துரைக்கின்றார். இடர் - எதிர்பாரா வகையில் உலகியல் வாழ்வில் உளவாகும் இடையூறுகள். இவற்றால் உள்ளம் வன்மை யிழந்து சுருங்குவது பற்றி, “துயரினால் இடரால் இடுக்குண்டு” என இயம்புகின்றார். இடுக்கு - சுருங்குதல். விரிந்து விளக்கமுறும் இயல்புடைய மனம் துயர்களாலும் இடர்களாலும் சுருங்கி மெலிவது பற்றி, “துயரினால் இடரால் இடுக்குண்டு” என உரைக்கின்றார். எஞ்சல் - குன்றுதல். இடையற வின்றிப் பெருகும் துன்பத்தால் வருந்தும் ஆன்மாவுக்கு இறைவன் திருவருள் அன்றித் துணை வேறில்லாமை பற்றி, “நின் இன்னருள் விரும்பி வந்து நிற்கின்றேன்” எனக் கூறுகின்றார். துன்பத்தைத் துடைத்து ஒழிப்பது இன்பமாகலின் அதனை வழங்கும் தன்மைத்தாகிய திருவருளை, “இன்னருள்” என இசைக்கின்றார். அதனை முற்பட உணர்ந்து வேண்டாமை தோன்றத் தம்மை, “வஞ்ச நெஞ்சினேன்” என இழித்துரைக்கின்றார். இறைவன் திருவுள்ளம் கொண்டாலன்றி இத்திருவருட் பேறு தமக்கு எய்தாது என்னும் கருத்தால், “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” என இயம்புகின்றார். கணந்தோறும் எய்துகின்ற துன்பங்கட்கு அஞ்சித் திருவருளை மறந்தொழிவது விளங்க, “அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்” என்றும், இறைவனுக் காட்பட்டாலன்றித் தமக்கு உய்தி யில்லை என்பதைத் தமது உண்மை யறிவால் அறிவதை வெளிப்படு மொழிகின்றாராதலின், “அப்ப நின்னலால் ஒன்றும் அறிகிலேன்” என்றும் முடிந்த முடிபாக மொழிகின்றார். ஆட்கொள்வதே யன்றித் துன்பம் துடைத்து மகிழ்விக்கும் உறுதிப் பொருள் பரம்பொருளை யல்லது வேறு ஒன்றுமில்லை என்ற கருத்தை வலியுறுத்தற்கு, “ஒன்றும் அறிகிலேன்” என்று கூறுகின்றார்.

     இதனால், உலகியல் வாழ்வில் வந்து தாக்கும் துன்பங்களைப் போக்குதற்குரிய பொருளாவது சிவ பரம்பொருள் என்றும், அதற்கு ஆட்பட்டாலன்றி உய்தி கிடையாது என்றும் தெரிவிக்கின்றார்.

     (2)