3773. ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
நாயி னேன்பிழை பொறுத்திது தருணம்
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
உரை: சத்திய ஞான சபையையுடைய ஒப்பற்ற பெரிய தலைவனே; வடலூரின்கண் எழுந்தருளும் அருளரசே; ஒயாது ஆடுகின்ற வஞ்ச நினைவுகளை மனத்தின் வழி நின்று அலைந்து தளர்ந்து மனம் மயங்கி வாடிய நிலையில் இங்கே நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; வள்ளற் பெருமானாகிய உன்னுடைய திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன்; என்னுடைய விருப்ப மெல்லாம் உன் திருவருள்பாலன்றி வேறு எதன்பாலும் உண்டாவதில்லை; நாய் போன்ற கடையவனாகிய என் பிழைகளைப் பொறுத்து இச்சமயத்தில் நினது திருவருள் நிழலை அடியேனுக்குத் தருவாயாக. எ.று.
எப்பொழுதும் சலித்துக் கொண்டே யிருக்கின்ற இயல்புடையதாகையால், “ஆட்டம் ஓய்கிலா மனத்தால்” என்றும், எக்காலத்தும் வஞ்ச நினைவுகளே நிறைந்திருப்பது பற்றி, “வஞ்சக மனத்தால்” என்றும், கடலின்கண் அலை போலப் பல்வகை நினைவுகளால் அலைந்து மெலிவது பற்றி, “அலை தந்து அயர்ந்து” என்றும், மனத்தில் உண்டாகும் அயர்வு மயக்கத்தை எய்துவித்த உடம்பை மெலிவித்தல் பற்றி, “வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன்” என்றும் உரைக்கின்றார். உளம் மயர்தல் - மனம் மயங்குதல். மனத்தின் அலைவு நல்லது நினைக்கும் உள்ளத்தை மயக்கி உடம்பை மெலிவித்து வருத்தும் இயல்பை, “வஞ்சக மனத்தால் அலை தந்து அயர்ந்து உளம் மயர்ந்து வாட்டமுற்று வந்து நிற்கின்றேன்” எனத் தமது மெலிவு நிலையை விளம்புகின்றார். எனக்கு உளதாகிய மெலிவு நீக்கி அருள் வளம் நல்குதற்கு நின் திருவுள்ளப் பாங்கினை வேண்டுகின்றேன் என்பாராய், “உன்றன் மனக் குறிப்பறியேன்” என மொழிகின்றார். நின் திருவருளாலன்றி ஒரு நலமும் எய்தாது என்பதையுணர்ந்து நின்னையன்றிப் பிறிது யாதனையும் நாடுகின்றேனில்லை என யாப்புறுத்தற்கு, “நாட்டம் நின்புடையன்றி மற்றறியேன்” என எடுத்துரைக்கின்றார். இத்தருணத்தில் என் மனம் ஓரளவு தெளிவுற்றிருந்தலின் இதுகாறும் யான் செய்த பிழைகளைப் பொறுத்தருளி நினது திருவடி ஞானத்தை எனக்கு வழங்குதல் வேண்டும் எனப் போற்றுகின்றாராதலால், “நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் தாள் தலம் தருவாய்” என வேண்டுகின்றார்.
இதனால், மனத்தின் வழி நின்று வருந்தி மெலிந்த திறம் எடுத்தோதித் திருவடி ஞானம் நல்குக என வேண்டியவாறாம். (4)
|