3774.

     கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
          காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
     வருண நின்புடைய வந்துநிற் கின்றேன்
          வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
     அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
          ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
     தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
          சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

உரை:

     சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; வடலூரில் கோயில் கொண்டருளும் அருளரசே; இரக்கப் பண்பு சிறிதுமில்லாத கல்லின் தன்மையையுடைய மனமாகிய குரங்கினால் நாடு முழுவதும் திரிந்து உள்ளம் மெலிந்து சிவத்த திருமேனியை யுடைய நின் திருமுன் வந்து வணங்குகின்றேன்; வள்ளலாகிய உன்னுடைய திருவுள்ளக் குறிப்பை அறிந்திலேன்; ஆட்டின் இயல்புடைய கீழ்மக்கள் என்று என்னைப் புறக்கணிப்பாயாயின், ஐயோ, எனக்குத் துணையாவார் வேறு ஒருவரையும் காண்கிலேன்; மெலிந்து வந்த எனக்கு இத்தருணத்தில் நினது திருவருள் ஞானத்தை நல்குவாயாக. எ.று.

     இரக்கப் பண்பு சிறிதும் இல்லாமை பற்றி, “கருணை ஒன்றிலாக் கல் மனம்” என்றும், குரங்கு போல் ஒரு பொருளிலும் ஒன்றி நில்லாமை ஒடி அலைவது பற்றி மனத்தை, “குரங்கு” என்றும் கூறுகின்றார். காடும் மேடும் நிறைந்தது நாடாகையால் நாடு முழுதும் அலைந்த திறத்தை, “காடும் மேடும் உழன்று” என விரித்துரைக்கின்றார். பயனின்றித் திரிந்தமையால் உள்ளமும் உடம்பும் மெலிந்தமை தோன்ற, “உள்ளம் மெலிந்து வந்து நிற்கின்றேன்” என்று கூறுகின்றார். வருணன் - சிவந்த நிறமுடையவன். வருணம் நிறத்திற்காகிச் செம்மை நிறத்தின் மேலதாயிற்று. சிவபெருமானைச் “செம்மேனி அம்மான்” என்று சான்றோர் புகழ்வது பற்றி இவ்வாறு கூறுகின்றார். உன்னுடைய திருவுள்ளப் பாங்கை அறியேனாயினும் நீ மாறாமல் உனது அருளை வழங்குவாய் என்னும் கருத்துடையேன் என்பாராய், “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” என உரைக்கின்றார். அருணம் - ஆடு. ஆட்டின் பண்புடையவனை “அருணன்” என்று குறிக்கின்றார். தன்னைக் கொல்வோனுடைய குறிப்பறியாது அவன் கையிலுள்ள குழையைத் தின்னும் இயல்பு பற்றி ஆட்டை இங்கே இகழ்ந்து கூறுகின்றார். என்னைப் புறக்கணிப்பாயாயின் யான் வேறு துணையின்றிக் கெடுவேன் ஆதலால் எனக்கு அருள் புரிக என்பாராய், “எனை அகற்றிடுவாயேல் துணை அறிந்திலேன் எற்கு அருள்வாய்” என வேண்டுகின்றார்.

     இதனால், தன் கீழ்மைப் பண்பு கண்டு புறக்கணியாமல் திருவருள் வழங்க வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (5)