3775. கரண வாதனை யால்மிக மயங்கிக்
கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
உரை: சத்திய ஞான சபையையுடைய ஒப்பற்ற பெருந் தலைவனே; வடலூரில் எழுந்தருளும் அருளரசே; கருவி கரணங்கள் செய்யும் துன்பத்தால் மிகவும் மயங்கிக் கலக்கமுற்று ஆதரவு ஒன்றும் அறியேனாய் இறப்புப் பிறப்புக்கள் நீங்குமாறு நின் திருமுன் போந்து நிற்கின்றேன்; ஆயினும் வள்ளலாகிய உன்றன் திருவுள்ளக் கருத்தினை அறிகிலேன்; கொலை புரியும் கொடியவன் என்று என்னை எண்ணிப் புறக்கணிக்க வேண்டா; வேறு யாதொன்றின் மேலும் எனக்கு விருப்பமில்லையாதலால் எந்தையாகிய உன்னுடைய இரண்டாகிய திருவடிகளை எனக்குத் தந்தருள்வாயாக. எ.று.
கண் முதலிய ஐம்பொறிகளாலும், மனம் முதலிய அந்தக்கரணங்களாலும் அலைப்புண்டு அறிவு தெளிவின்றி வருந்தினேன் என்பாராய், “கரண வாதனையால் மிக மயங்கிக் கலங்கினேன்” என்றும், அக்கலக்க மிகுதியால் பற்றுக் கோடாய் நின்று ஆதரிப்பார் ஒருவரையும் பெற்றிலேன் என்பாராய், “ஒரு களைகணும் அறியேன்” என்றும் உரைக்கின்றார். கரணவாதனைகளின் முடிவு இறப்புப் பிறப்புக்களில் வந்து நிற்பதாகையால் அது மேலும் துன்பத்திற்கே இடமாதல் பற்றி, “மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன்” எனவும், அது தானும் நினது திருவருளால் அன்றி எய்துவதன்றாதலால் உனது திருவருட் குறிப்பை முற்பட அறிகிலேன் என்பார், “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” எனவும், இயம்புகின்றார். இரணன் - வாள் முதலிய கருவிகளைக் கொண்டு கொலை புரிபவன்; புண் செய்பவன் எனினும் பொருந்தும். கொலை முதலிய குற்றங்களைச் செய்யும் கொடியவன் என்பது கருத்து. நோய் விளைவித்துத் திருவருளைப் பெறக் கருதும் கீழ்மகன் என்று எண்ணலாகாது என்பார், “இரணன் என்றெனை எண்ணிடேல்” என இயம்புகின்றார். நினது திருவடியாகிய திருவருட் செல்வத்தைப் பெறுவது ஒன்றே என் குறிக்கோள் என்று வலியுறுத்தற்கு, “பிறிதோர் இச்சை ஒன்றிலேன் எந்தை நின் உபய சரணம் ஈந்தருள்வாய்” என்று உரைக்கின்றார்.
இதனால், இறைவன் திருவடி நீழலில் தமக்குள்ள பெருவிருப்பத்தை வடலூர் வள்ளல் தெரிவித்துக் கொண்டவாறாம். (6)
|