3776. தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
உரை: சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; ஒப்பற்ற வடலூர்க்கண் உள்ள அருளரசே; தூய நெஞ்சினை யுடையவனாய் முன்னை நாட்களில் நினது திருவருள் இன்பத்தை விரும்பா தொழிந்தேன் எனினும், பொய்யான உலகியல் வாழ்வின் மயக்கத்தை விரும்பாமல் நின்னுடைய திருமுன் வந்து நிற்கின்றேன்; வள்ளலாகிய உனது திருவுள்ளக் கருத்தினையும் அறியேன்; எனக்கு உனது திருவருள் ஞானத்தை நல்குதற்கு ஏற்ற தருணம் இதுவாகும்; ஆதலால் எனக்கு அதனை ஈந்தருள்க; எந்தையாகிய நின்னுடைய மலர் போன்ற இரண்டு திருவடிகளை யன்றி உரிமையாகப் பெறக் கூடிய பொருள் வேறு யாதொன்றும் இல்லாதவனாயினேன். எ.று.
உலகியற் சூழலில் கலக்கும் முன் யான் தூய்மை யுடைய நெஞ்சினையுடையவனாய் விளங்கினேனாயினும் அக்காலத்தில் உனது திருவருள் இன்ப வாழ்வினை விரும்பா தொழிந்தேன் என்பார், “தூய நெஞ்சினேன் அன்று நின் கருணைச் சுகம் விழைந்திலேன்” என உரைக்கின்றார். அன்று என்பது சகலாவத்தை எய்துதற்கு முன் இருந்த கேவல நிலை. கேவலத்தில் கிடந்த பொழுது அறிவுருவாகிய தான் அழுக்குறாது இருந்தமை புலப்பட, “தூய நெஞ்சினேன்” என்று சொல்லுகின்றார். அறிவுருவாக இருந்தும் இறைவனது திருவருள் இன்பத்தை நினையாது இருந்தமை புலப்பட, “அன்று நின் கருணைச் சுகம் விழைந்திலேன்” என இயம்புகின்றார். அக் குற்றத்தால் சகலாவத்தையில் மக்கட் பிறப்புற்று உலக வாழ்வில் தோன்றி மயங்கினது பற்றி, “பொய்யுலக மாயம் வேண்டிலேன்” எனவும், வேண்டாத அதனை விடுத்தாற் பொருட்டு நின் திருமுன் வந்து நிற்கின்றேன் என்பாராய், “வந்து நின்கின்றேன்” எனவும், அதனை எய்துதற்கு உன் திருவருள் இன்றியமையாது என்பாராய், “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” எனவும் உரைக்கின்றார். பொய்யுலக மாய வாழ்வில் விருப்புறாது அதனை விலக்குதற்குக் கருதும் மனப்பான்மை என் உள்ளத்தில் நிலவும் தருணம் இதுவாகும் ஆதலால் எனக்கு அதனைத் தந்தருள்க என விண்ணப்பிப்பாராய், “ஈய வாய்த்த நல்தருணம் ஈது அருள்க” என வேண்டுகின்றார். தாயம் - உரிமை. திருவருட் பேற்றுக்குரிய இறைவன் திருவடிகள் தாம் பெறுதற்குரிமை யுடையவை என்றற்கு, “எந்தை நின் மலரிணை அடி யல்லால் தாயம் ஒன்றிலேன்” என விளம்புகின்றார்.
இதனால், இறைவன் திருவடிக்குத் தமக்குள்ள உரிமையை வற்புறுத்தவாறாம். (7)
|