3777. சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
உரை: சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; வடலூரில் எழுந்தருளும் அருளரசே; சிரத்தை முதலிய நற்குணங்கள் சிறிதும் இல்லாதவனும், அருட் செயல் புரியாதவனுமாகிய நான், சாகா வரம் வேண்டி நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; ஆயினும் வள்ளலாகிய உன்னுடைய திருவுள்ளக் கருத்தை அறிந்திலேன்; அதனால் விடத்தை ஒத்த நெஞ்சினை யுடையவன் என்று கருதி நீ கைவிடுவாயானால், நான் ஒருகணப் பொழுதும் இனிப் பொறுக்கமாட்டேன்; எனக்கு நின் திருவருள் ஞானத்தைப் பெறுதற்குரிய தகுதியினைத் தந்தருள்வாயாக. எ.று.
சிரத்தை - அக்கறை யுடைமை. மேற்கொண்ட செயல்களை முற்ற முடித்தற்கு வேண்டிய கருத்தூற்றம் இங்கே சிரத்தை எனக் குறிக்கப்படுகிறது. கருமமே கண்ணாக இருப்பது எனினும் பொருந்தும். இது சிறந்த நற்குணமாதலால், “சுபகுணம்” எனப் பாராட்டப்படுகிறது. சிரத்தை முதலிய நற்பண்பு இல்லாதவர்க்கு இரக்கம் முதலிய நற்செயல்கள் உலவாகாவாதலின், “சிரத்தையாகிய சுபகுணம் சிறிதும் சேர்ந்திலேன் அருட் செயலிலேன்” என உரைக்கின்றார். அருட் செயல்கள் என்றும் அழியாப் புகழுடம்பை விளைவிப்பனவாகவும், யான் அதனை விடுத்து அதற்கு மாறாய சாகா வரத்தைப் பெற வேண்டி உன்னுடைய திருமுன் நிற்கின்றேன் என்பாராய், “அருட் செயலிலேன் வரத்தை வேண்டினேன் வந்து நிற்கின்றேன்” என மொழிகின்றார். எனது குற்றங்களைப் பொறுத்து நீ அருளுதல் வேண்டும் என்றற்கு, “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” எனக் கூறுகின்றார். கரம் - விடம். நெஞ்சில் கள்ளமும் கரம்மும் உடையவர் கடையராகக் கருதப்படுதலின், “கரத்தை நேருளக் கடையன் என்றெனை நீ கைவிடேல்” எனவும், குற்றம் உணர்ந்து மனம் மெலிவுற்று வருந்துகின்றேன் என்பாராய், “கைவிடேல் இனி ஒருகணம் ஆற்றேன்” எனவும், மெலிவு போக்கித் திண்மை தந்து திருவருள் ஞானம் பெற அருளுக வென வேண்டுவாராய், “தரத்தை ஈந்தருள்வாய்” எனவும் வேண்டுகின்றார்.
இதனால், செய்த குற்றங்களை நினைந்து மெலிவுற்று வருந்தும் எனக்குத் திருவருள் ஞானப் பேற்றிற்குரிய மனத் திட்பத்தைத் தந்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (8)
|