3778.

     பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
          பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
     மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
          வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
     எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
          ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
     சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
          சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

உரை:

     வடலூரின் கண் எழுந்தருளும் அருளரசே; சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; உணவு வகையில் பத்திய மொன்றும் கொண்ட தில்லேன்; உன்னிடத்தில் பத்தி சிறிதும் இல்லாதவன்; பரமனாகிய உனது கருணையாகிய தேனையுண்டு மகிழ்தற்கு நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; வள்ளற் பெருமானாகிய நினது திருவுள்ளக் குறிப்பை யறிகிலேன்; என் கவலையைப் போக்கி இனி அஞ்சுதல் ஒழிக என்று அருள் புரியாயின், ஏழையாகிய யான் என் உயிரை விட்டொழிப்பேன்; இதனை நின் மேல் ஆணையாக வுரைக்கின்றேன்; இது சத்தியமாகும். எ.று.

     பத்தியம் - நோயுற்றார்க்கு மருந்தளிக்கும் மருத்துவர் உரைக்கும் உணவு முறை. சத்தியம் தவறினும் பத்தியம் தவறலாகா தென்பது மருத்துவர் கூறும் அறிவுரை. பத்திய நெறியை மேற் கொள்ளாதொழுகும் குற்ற முடையேன் என்பாராய், “பத்தியம் சிறிது உற்றிலேன்” எனப் பகர்கின்றார். இறைவனது அருளுண்மையும் அதனைப் பெறுவதன் இன்றியமையாமையும் உணர்ந்தவர் அதுபற்றி அவன்பால் பத்திவைராக்கிய முடையராதல் முறையாகவும் யான் அது சிறிதும் உடையவ னல்லன் என்று காட்டற்கு, “உன் பாற் பத்தி யொன்றிலேன்” எனத் தெரிவிக்கின்றார். இத்துணைக் குறைகளிருப்பினும் பரம் பொருளாகிய நின்னுடைய திருவருளாகிய தேனைப் பெற்றுண்ண வேண்டி நின் திருமுன் வந்து நிற்கின்றேன் என்றும், அதன் பொருட்டு நினது திருவுள்ளக்கருத்தை அறியேனாய் வருந்துகின்றேன் என்பாராய், “பரம நின் கருணை மத்தியம் பெற வந்து நிற்கின்றேன்” எனவும், “வள்ளலே யுன்றன் மனக் குறிப்பறியேன்” எனவும் இயம்புகின்றார். மத்தியம் - தேன்; மது என்னும் சொல்லடியாக மத்தியம் என்ற சொல் வந்துளது. எத்துதல் - போக்குதல். எத்தப்படுவது - மனக்கவலை. “இனி வருந்துதல் வேண்டா; உன் மனக்கவலை ஒழிக” என மொழிந்து அருள் புரியாயாயின் யான் உயிர் வாழ்வின் பயனின்மையை எண்ணி உயிர் துறப்பேன் என உரைப்பாராய், “எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன்” என்று உரைக்கின்றார். தமது கூற்றினை வற்புறுத்தற்கு, “உன் ஆணை” என்றும், “சத்தியம் புகன்றேன்” என்றும் எடுத்தோதுகின்றார்.

     இதனால், திருவருள் பெறாவிடின் தாம் உயிர் வாழ்வதால் பயனில்லை என வற்புறுத்தியவாறாம்.

     (9)