3785. மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
உரை: மின்னலைப் போல் ஒளி வீசுகின்ற விரிந்த சடையையுடைய பெருமானே; ஒளி விளங்கும் உன்னுடைய இரண்டாகிய திருவடிகளை அடியவனாகிய யான் மெய்யுற அழுந்தப் பிடித்துக் கொண்டேன்; முற்காலத்தைப் போல யான் ஏமாற்றமுற்று அவற்றை விட மாட்டேன் காண்; வெறுப்புணர்வில்லாத பரமனாகிய நீர் இனி எனக்கு உம்மை மறைத்துக் கொள்ள முடியாது; என் போல் இரக்கமின்றி உம்முடைய திருவடிகளைப் பற்றிக் கொண்ட அடியவர்கள் உமக்கு யாருமில்லை; என் பிடிக்குள் இசைந்து அகப்பட்டது போல் நீரும் பிறர் பிடித்துக் கொள்ள இசைந்ததில்லை; பொன் பெறுவாரைப் போல முயற்சி செய்கின்ற மெய்த்தவமுடையவர்களுக்கும் இதுபோல் நீ அகப்படுவது அரிதாகும்; பொய்ந்நெறியை யுடையவனாகிய யான் செய்த தவம் வையத்திலும் வானத்திலும் பெரிதாகும். எ.று.
சிவபெருமானுடைய திருமுடியில் விளங்குகின்ற சடை மின்னலைப் போல ஒளி செய்வது எனச் சான்றோர் புகழ்ந்தோதுதலின், “மின் போலே விளங்குகின்ற விரிசடையீர்” என்று புகல்கின்றார். எக்காலத்தும் ஆடும் இயல்புடைய பெருமானாதலின் அவரது சடை விரிந்திருக்கும் இயல்பு பற்றி, “விரி சடையீர்” என விளம்புகின்றார். சிவனுடைய திருவடிகளைத் தமது மனத்தின்கண் அழுந்தப் பற்றி யிருக்கின்றாராதலால், வடலூர் வள்ளல், “விளங்கும் உமது இணையடிகள் மெய் அழுந்தப் பிடித்தேன்” என விளம்புகின்றார். முன்னொருகால் தமது மானதக் காட்சியில் சிவனது திருவடி எய்தப் பெற்றுப் பின்னர் அக்காட்சி முடிவில் மறைந்து ஒழியக் கண்டாராதலின், “முன் போலே ஏமாந்து விட மாட்டேன் கண்டீர்” என்றும், பலகாலும் நினைந்து போற்றினும் வெறாது காட்சி தந்து அருளுவது பற்றி, “முனிவறியீர்” என்றும், இடையறவு படாது மனத்தின்கண் சிவனுடைய திருவடிகளை நிறுத்தி வழிபடுதல் விடாமை தோன்ற, “இனி ஒளிக்க முடியாது” என்றும் விளம்புகின்றார். மானதக் காட்சியில் இறைவன் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டவர்கள், தம்மைப் போல் பிறர் பற்றியது இல்லை எனத் தெளிந்து உரைப்பாராய், “என் போலே இரக்கம் விட்டுப் பிடித்தவர்கள் இலையே” எனவும், தமது பிடிக்குள் இறைவன் அகப்பட்டது போல் பிறர் பிடிக்குள் அகப்படாமை விளங்க, “என் பிடிக்குள் இசைந்தது போல் பிறர்க்கு இசைந்ததிலை” எனவும் கூறுகின்றார். இறைவன் திருவடிகளை இறுகப்பற்றிக் கொள்ளும் சால்பு தமக்கு அமைந்ததைப் போல மெய்யுணர்வுடைய தாபதர்க்கும் அமையவில்லை என்றற்கு, “பொன் போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே” என விளக்குகின்றார். பொன் வேண்டி முயல்பவர் மெய்வருத்தம் பாராது கண்ணுறக்கமின்றி முயல்வது போல, மெய்ந்நெறித் தாபதர்கள் சிவபரம் பொருளைப் பெறற்கு முயல்கின்றமை இனிது தோன்ற, “பொன் போலே முயல்கின்ற மெய்த்தவர்” என்று புகல்கின்றார். யான் பொய்ந்நெறி யுடையேனாயினும் இறுகப் பற்றி இன்புறுதற்கு ஏற்ப யான் செய்த தவம் வானகத்தினும் வையகத்தினும் பெரிதாகும் என விளம்புவாராய், “பொய் தவனேன் செய்தவம் வான் வையகத்திற் பெரிது” என உரைக்கின்றார். பொய்தவன் என்றது மெய்ந்நெறித் தாபதர் போல அத்துணைச் சிறப்புடையவனல்லன் எனத் தனது தாழ்மையைப் புலப்படுத்தற்காம். எளிய நெறியில் முயன்று மெய்த்தவர்க்கும் எய்தாத திருவடிப் பெரும்பேறு தமக்கு எய்திய அருமையை விளக்குதற்கு, “வான் வையகத்திற் பெரிதே” என வியந்துரைக்கின்றார்.
இதனால், தமக்கு எய்திய திருவடிப் பேற்றை நினைந்து வியந்து வடலூர் வள்ளல் இறைவனைப் பாராட்டியவாறாம். (6)
|