3786.

     எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
          எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
     இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
          வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
     மதுதருண வாரிசமும் மலர்ந்தருள் உதயம்
          வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
     விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
          வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.

உரை:

      எங்கள் தலைவனே! எல்லாம் செய்ய வல்ல பெருமானே; எனக்கு அமைந்த ஒப்பற்ற தலைவனே; நீ எனக்குள் எழுந்தருளி ஞானானந்தம் தருதற்குரிய சமயம் யாதோ அதனை யான் அறிகிலேன்; ஆயினும் இச்சமயம் நினது திருவருள் இன்பம் எய்தத் தவறுமாயின் என் உயிர் நீங்கி விடும்; ஆதலால் எளியவனாகிய என் மேல் அருள் கூர்ந்து என் முன் எழுந்தருளுதல் வேண்டும்; தேன் பொருந்திய புதிது மலரும் தாமரையும் மலர்ந்து விட்டது; திருவருள் தோன்றுதற்குரிய காலமும் வாய்த்துளது; ஞானச் சபையினுடைய ஒளியும் உலகில் விளக்க முறுகிறது; அமுத சந்திரனிடத்து ஒழுகும் யோக ஞானவமுதத்தைத் தந்து என் எண்ணத்தை முடித்து வைக்கும் காலம் இதுவாகும் என்பதை நான் விளம்ப வேண்டுமோ? வேண்டாவன்றோ! எ.று.

     எம்மான் - எம்முடைய பெரிய தலைவன்; எம்மை யுடையவன் என்றலும் உண்டு. வரம்பில் ஆற்றலுடையவன் எனச் சிவபெருமானை ஆகமங்கள் பாராட்டுதலால், “எல்லாம் செய் வல்லவனே” என்றும், ஒப்பற்ற தலைவன் என்பது பற்றி, “என் தனி நாயகனே” என்றும் போற்றுகின்றார். சிவபெருமானுடைய திருவருள் எய்தும் காலம் இதுவென முன்னுணர்ந்து கொள்ளும் மதிமை தமக்கில்லை என்பதைத் தெரிவித்தற்கு, “எது தருணம் அது தெரியேன்” என்றும், என்றாலும் திருவருள் ஞானப் பேற்றிற்குத் தாம் சமைந்திருக்கும் தனி நிலையைப் புலப்படுத்துதற்கு, “இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும்” என்றும் இயம்புகின்றார். வேறு வகையால் இறைவன் திருவருளைப் பெறுதல் முடியாதாகையால் “எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்” என இறைஞ்சுகின்றார். திருவருள் ஞானம் தமக்கு எய்துதற்கேற்ற சூழ்நிலை இப்பொழுது அமைந்துளது என்பாராய். “மது தருண வாரிசம் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் உலகில் வயங்குகின்றது” என்று கூறுகின்றார். தருண வாரிசம் - அப்பொழுது மலரும் தாமரை; புதிது மலரும் தாமரை எனினும் அமையும். மது - தேன். அருள் உதயம் - திருவருளைப் பெறுதற்குரிய பக்குவம் வாய்த்தது. ஞான சபையின்கண் நிலவுதற்குரிய ஞானப் பேரொளி உலகவர் அறிய விளங்குவது புலப்பட, “சிற்சபை விளக்கம் உலகில் வயங்குகின்றது” எனக் குறிக்கின்றார். அருள் ஞானத்தால் ஞான சபையின்கண் ஒளிர்கின்ற கூத்தப் பெருமானை யோக நெறியில் துவாத சாந்தத்தில் தரிசிக்கின்ற பொழுது அமுத சந்திரன் தோன்றி ஞான வமுதத்தைச் சொரியும் என யோக நூலார் கூறுதலால், அதனை எடுத்தோதி, அந்தச் சந்திராமுதத்தை உண்டு தேக்கறியும் பேற்றினை நல்கி மகிழ்விக்கும் காலம் இதுவேயாம் என உரைப்பாராய், “விது தருண அமுதளித்து என் எண்ணமெலாம் முடிக்கும் வேலை இதுகாலை” என்றும், இது தேவரீர் இனிதறிந்த செய்தியாதலின் யான் மீள எடுத்துரைத்தல் வேண்டாவாம் என்பாராய், “இதுகாலை என விளம்பவும் வேண்டுவதோ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், யோக நெறியில் துவாத சாந்தத்தில் சந்திராமுதத்தைப் பெற்றுத் திருவருள் காட்சி பெறும் திறம் கூறியவாறாம்.

     (7)