3787. கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்தே கொழுநா
ஆள் அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
உரை: அருள் நெறிக்குரிய கொள்கைகளை அறிந்தொழுகும் பெரிய தவத்தை யுடைய சான்றோர்களின் குறிப்புணர்ந்து வேண்டுவனவற்றை உதவி யருளும் கொடை வள்ளலே; சிவகாமக் கொடியாகிய உமாதேவியின் மனத்திற் கிசைந்த கணவனே; ஆளாந்தன்மை என்பால் உண்மை யறிந்து இவ்வுலகில் என்னை ஆண்டு கொண்ட அருளரசே; எனக்கு இனிய அமுது போன்றவனே; அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற அரிய பெரிய ஒளி யுருவானவனே; நின் திருவடிகளைக் கண்டு கொண்டேனாதலால் நினது வரவு மெய்யே; இதில் சிறிதும் சந்தேகமில்லை என்று தெளிந்து கொண்டேன்; அந்த ஒப்பற்ற நினது வரவுக்குரிய நன்னாளை யான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்; என்னுடைய நனவின் கண் இல்லையாயினும் கனவிலாயினும் போந்து சொல்லியருளுக. எ.று.
திருவருள் ஞானப் பேற்றிற்குரிய பொய்தீர் ஒழுக்க நெறிகளை உணர்ந்தொழுகும் பெருமக்களை, “கோள் அறிந்த பெருந்தவர்” என்று கூறுகின்றார். அப்பெருமக்கள் வேண்டுவதை வேண்டியவாறு குறைவறக் கொடுத்தருளும் வள்ளன்மை பற்றி, “பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும் கொடையாளா” என்று புகழ்கின்றார். தில்லையில் கோயில் கொண்டருளும் உமாதேவியைச் “சிவகாமி” என்றும், “சிவகாமக் கொடி” என்றும், “சிவகாமவல்லி” என்றும் பெரியோர் புகல்வது பற்றி “சிவகாமக் கொடிக்கு இசைந்த கொழுநா” என்றும் குறிக்கின்றார். ஆளாந்தன்மை யுடையாரையன்றிப் பிறரை ஆட்கொள்வது இறைவன் இயல்பன்மையின், “ஆள் அறிந்திங்கு எனை ஆண்ட அரசே” என்று இசைக்கின்றார். “ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா” (பாசுரம்) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் சிவ பரம்பொருள் ஆதியும் அந்தமுமில்லாத அரும் பெருஞ்சோதி வடிவாய் விளங்குதல் பற்றி, “அம்பலத்தே நடம் புரியும் அரும்பெருஞ் சோதியனே” என்று போற்றுகின்றார். திருவடி ஞானப்பேற்றால் இறைவன் எழுந்தருளி அடியார்க்கு அட்டியின்றி, அருளும் நலம் அறிந்துள்ளாராதலின், “தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகமில்லை” என உரைக்கின்றார். தமது வரவினை இறைவன் எவர்க்கும் நனவின்கண் நேர்படப் போந்து உரைப்பதில்லையாதலால், “அந்தத் தனித்த திருவரவின் நாள் அறிந்து கொளல் வேண்டும்” என்றும், “எனது நனவிடையாயினும் அன்றிக் கனவிடையாயினும் நவிலுக” என்றும் விண்ணப்பிக்கின்றார்.
இதனால், இறைவனது திருவருள் வரவை முன்னுற யுணர்த்தி அருளல் வேண்டுமென விண்ணப்பிக்கின்றவாறாம். (8)
|