3788.

     அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
          அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
     கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற தரசே
          கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
     பொன்றிடப்பேர் இன்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
          புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
     இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
          றெழுந்தருளி அருள்வதெல்லாம் இனிதருள்க விரைந்தே.

உரை:

     கணுக்களையுடைய கரும்பு போன்ற பெருமானே! அருளரசே! அன்றொருநாள் திருவருட் பேற்றிற் கெனநீ குறித்தருளிய காலம் இதுவாகுமென்று நன்கு அறிந்திருக்கின்றேனாயினும், அடியவனாகிய எனது மனம் அடிக்கடி தாயை நினைந்தோடும் கன்று போல நினது திருவருளை அடிக்கடி நினைந்து உள்ளம் கலக்கமுறுகின்றது; கவலையுறும் எனது மனம் கலக்க மில்லாததாகவும், திருவருள் இன்பவெள்ளம் பொங்கிடப் பெருகவும், இந்த உலகிலுள்ள புண்ணியப் பெருமக்களின் திருவுள்ளம் பொங்கி விளங்கிடவும் இப்பொழுது நீ எனக்கு முன் வெளிப்படையாக என் மனத் தாமரையின்கண் எழுந்தருளி எனக்கு அருளத் தக்கவை யெல்லாம் இப்பொழுதே விரைந்து அருள்வாயாக. எ.று.

     சிவனுக்குக் கரும்பை ஒப்புக் கூறுகின்றாராதலின் கணு வுடைமை பற்றி, “கண்ணுடைக் கரும்பே” என்று கூறுகின்றார். கணு - கண் எனவும் வழங்கும். இறைவன் மூன்று கண்களை யுடையனாதல் பற்றி அவனை “முக்கட் கரும்பு” என மொழியும் இயல்பு பற்றி, “கண்ணுடைய கரும்பே” என மொழிகின்றார் எனினும் பொருந்தும். முன்பொருகால் சிவ பரம்பொருள் வடலூர் வள்ளலார்க்குக் கனவின்கண் எழுந்தருளித் திருவருள் ஞானம் நல்கும் காலத்தை உரைத்திருக்கின்றமை தோன்ற, “அன்றெனக்கு நீ உரைத்த தருணம் இதுவெனவே அறிந்திருக்கின்றேன்” என அறிவிக்கின்றார். இறைவன் திருவடியை மனத்தில் கொண்டு எப்பொழுதும் இடையறாது நினைந்தொழுகும் பாங்கினராதலால் வடலூர் வள்ளல் தம்மை 'அடியேன்' என்று உரைக்கின்றார். இறைவன் திருவடியை உள்ளத்தில் கொண்ட உரிமையால் இறைவன் அவர்க்கு, இறைவன் திருவருள் இன்பம் நல்கும் காலம் இதுவென முன்னமே உரைக்கப்பட்டுளது என அறிக. திருவருட் பேற்றிற்குரிய காலம் இதுவென அறிந்திருந்தும் விரைந்து பெறுதல் வேண்டு மென்று விதுப்பு மனத்தின்கண் நின்று அலைப்பது புலப்பட, “என் மனந்தான் கன்றெனச் சென்று அடிக்கடி உட்கலங்குகின்றது” என்று மனங் கலங்குகின்றார். மனக் கவலை திருவருள் இன்ப நினைவுகளைப் போக்குதலின் அதனை ஒழித்தல் வேண்டுமென முறையிடுவாராய், “என் கவலை மனக் கலக்கம் பொன்றிட” எனவும், “பேரின்ப வெள்ளம் பொங்கிட” எனவும் புகல்கின்றார். பிறர் ஆக்கம் கண்டு இன்புறுதல் புண்ணியவான்களின் மனப் பண்பாதலின், “இவ்வுலகில் புண்ணியர்கள் உளங் களிப்புப் பொருந்தி விளங்கிட” என்று இயம்புகின்றார். இறைவன் அடியவர் உள்ளத் தாமரையின்கண் எழுந்தருளி அருள்செய்வது மரபாதலின், “நீ இன்று எனக்கு வெளிப்பட என் இதய மலர்மிசை நின்று எழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே” என நவில்கின்றார். இதயத் தாமரையின்கண் எழுந்தருளும் காட்சி தெளிவுறத் தோன்றல் வேண்டும் என வற்புறுத்தற்கு, “வெளிப்பட என் இதய மலர்மிசை நின்று எழுந்தருளி” என உரைக்கின்றார். வேண்டுவார்க்கு வேண்டுவதைக் குறைவறக் கொடுத்தருளும் கொடையாளனாதல் பற்றி, “அருள்வது எலாம் இனிதருள்க விரைந்தே” என எடுத்துரைக்கின்றார்.

     இதனால், மனக்கவலை நீங்க இதயத் தாமரையின்கண் எழுந்தருளி அருள் நலம் அனைத்தும் ஈந்தருளுக என வடலூர் வள்ளல் விண்ணப்பித்தவாறாம்.

     (9)