3789.

     இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
          இனித்தடைஒன் றிலைகண்டாம் என்மனனே நீதான்
     மதுவிழுமோர் ஈப்போல மயங்காதே கயங்கி
          வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
     குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
          குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
     பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
          புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.

உரை:

     என்னுடைய மனமே, இறைவன் நம்மை ஆட்கொள்வதற்கு நம் உள்ளத்தில் எழுந்தருளுதற்குரிய காலம் இதுவாகும்; இப்பொழுது அதற்கு ஒரு தடையுமில்லை; நீதானும் தேனில் விழுகின்ற ஈயைப் போல மயக்கமோ மெலிவோ எய்தி வாட்டமுற்று வருந்தாமல் மலர்ந்து மகிழ்ந்திருப்பாயாக; இந்த நாழிகை முதல் நமக்கு இன்ப நிறைவே யன்றிக் குறைவு சிறிதும் இல்லை யென அறிக; இது நமது குருமுதல்வன் கட்டளையும் நமது பெரிய குலதெய்வத்தின் ஆணையுமாகும்; அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற புண்ணிய மூர்த்தியாகிய கூத்தப்பிரான் என்னுட் புகுந்து உரைத்தருளிய திருமொழியும் பொன்மொழியும் இதுவேயாம். எ.று.

     திருவருட் பேற்றிற்குரிய தருணம் யாதாகுமென எண்ணி அலைந்த மனத்திற்குத் தெளிவு நல்குகின்றாராதலால், “என் மனனே இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனித் தடை ஒன்றிலை கண்டாய்” என உரைக்கின்றார். தேனில் விழுந்த ஈ பறக்கும் திறமின்றி மயங்கி மெலிவுற்று வாடி வருந்துவது, மனம் திருவருள் இன்பத்தை நினைந்து வருந்தும் திறத்தை விளக்குவதாகும். திருவருள் இன்பத்தையே நினைந்து எப்பொழுது கை கூடுமோ என ஏங்கும் நிலையைப் போக்கி மகிழ்வுடன் தெளிவு கொண்டு இருப்பாயாக என வற்புறுத்தற்கு, “மலர்ந்து மகிழ்ந்திருப்பாய்” என உரைக்கின்றார். கயங்குதல் - கசங்கி மெலிதல். மலங்குதல் - வருந்துதல். மலர்தல் - கிளர்ச்சி யுறல், இப்பொழுது முதலே நமக்கு இன்பமே யன்றி இன்பக் குறைவு சிறிதுமில்லை யென்றற்கு, “குதுகலமே இது தொடங்கிக் குறைவிலை காண்” எனத் தெளிவிக்கின்றார். குதுகலம் - குதூ கலம் எனவும் வழங்கும். இன்ப நிறைவு என்பது பொருள். குருவும் குலதெய்வமும் கூத்தப்பெருமானேயாதலால், “நமது குருவாணை நமது பெருங்குலத் தெய்வத்தாணை” எனவும், “பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்துரைத்த திருவார்த்தை” எனவும் தெரிவிக்கின்றார். பொன் வார்த்தை - மெய்ம்மொழி. பொது - அம்பலம்.

     இதனால், கலக்கமுறும் மனத்திற்கு இறைவன் ஆட்கொள்ள எழுந்தருளும் தருணம் இதுவென எடுத்தோதித் தெளிவு நல்கியவாறாம்.

     (10)