3791. பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
உறுவதுநும் அருள்அன்றிப் பிறிதொன்றும் உவவேன்
உன்னல்உம் திறன்அன்றிப் பிறிதொன்றும் உன்னேன்
மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
உரை: மாறாய நெறியிற் செல்லும் என்னை அதனின்றும் நீக்கித் திருவருளில் வாழச் செய்தருளிய பெருமானே; அருள் வள்ளலே உம்முடைய ஞானத் திருவரவைக் கண்குளிரக் கண்டல்லது அறுவகைச் சுவையோடு கூடிய உணவைப் பெற்று அருந்த மாட்டேன்; நும்மைப் பெறுவதன்றிப் பிறிது யாதும் விரும்பமாட்டேன்; பேசுவதும் நும்முடைய பேச்சுக்களை யன்றிப் பிறிதொரு சொல்லும் பேச மாட்டேன்; அடைவது நுமது திருவருளே யன்றிப் பிறிது யாதாயினும் அதனை உள்ளத்திற் கொண்டு மகிழமாட்டேன்; நினைப்பது உமது அருள் வகையன்றிப் பிறிது யாதனையும் மனத்தால் நினைக்கமாட்டேன்; அருட் பெருஞ் சோதி வடிவினராகிய பெருமானே; இதற்கு நும் மேல் ஆணை. எ.று.
பிறவிக் கேதுவாகிய பொறி புலன்கள் காட்டும் வழி மறுநெறியாதலால் அவ்வழிச் செல்லாது திருவருளாகிய செம்மை நெறிக்கண் நின்றொழுகுகின்ற தமக்கு அது திருவருளால் வாய்த்த தென்னும் கருத்தினராதலால், “மறுநெறி தீர்த்தென்னை வாழ்வித்துக் கொண்டீர்” என்றும், அவ்வாழ்வு ஞானப் பயனை நல்கும் பெருவாழ்வாதற்கு நுமது திருவடிக் காட்சி இன்றியமையாது என்பாராய், “வள்ளலே நும் திருவரவு கண்டல்லால் அறுசுவை உண்டி கொண்டு அருந்தவும் மாட்டேன்” என்றும் உரைக்கின்றார். திருவருள் ஞான நெறியை மேற்கொண்டாராயினும் உலகில் உண்பன உண்டு வாழ்வாங்கு வாழ வேண்டுதலின், “அறுசுவை உண்டி கொண்டு அருந்தவும் மாட்டேன்” எனத் தெளிவிக்கின்றார். பெறுவது என்பது இறைவன் திருவருட் காட்சியினைப் பெறுவதாகும். உலகியற் காட்சிகளை விரும்பாது இறைவனது அருட் காட்சியினை விரும்புதல் விளங்கப் “பெறுவது நுமையன்றிப் பிறிது ஒன்றும் விரும்பேன்” என்று கூறுகின்றார். உலகியல் வாழ்வில் பேசப்படுவன பலவும் உலகியற் பொருட்கள் பற்றியனவாதலின் யான் அவ்வழிச் செல்லாது நினது பொருள் நிறைந்த புகழைப் புகன்றுரைக்கும் பேச்சுக்களிலேயே ஒன்றிய கருத்துடையேன் என்பாராய், “பேசல் நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்” என்றும், பெறக் கருதுவனவற்றுள் திருவருட் செல்வமே தம்மால் பெரிதும் விரும்பப்படுவது என்றற்கு, “உறுவது நும் அருளன்றிப் பிறிதொன்றும், உவவேன்” என்றும் இயம்புகின்றார். உவவேன் என்பது உவத்தலைச் செய்யேன் என்னும் பொருட்டு; உவத்தல் என்பது உறுவது உற்ற வழி உள்ளத்தில் உளதாகும் உவகை. உன்னுதல் - ஊன்றி நினைத்தல். அஃதாவது பொருளாய தொன்றைப் பற்றி நீள நினைத்தல். திருவருள் வாழ்வில் உன்னுதற்குரிய பொருள் இறைவனுடைய அருட்டிறமாதலால், “உன்னல் உம் திறனன்றிப் பிறிதொன்றும் உன்னேன்” என வற்புறுத்துகின்றார்.
இதனால், திருவருள் வாழ்வில் நிற்கும் தமது உள்ளத்தின் உண்மை நிலையை வடலூர் வள்ளல் எடுத்துரைத்தவாறாம். (2)
|