3792. கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
உரை: திருவருள் ஞானமாகிய பேரொளியையுடைய பெருமானே; கரும்பின் சாறும் கனியினுடைய இன்சுவையும் போல எளியேனுடைய உள்ளத்திற் கலந்து இனிமை செய்கின்றீர்; யானும் நுமது திருவருளை விரும்பி நும்முடைய அழகிய திருவடிக்கு ஆட்பட்டு நிற்கின்றேன்; எனக்கு இனிமேல் உண்டாவது இன்னதென அறிகிலேன்; அறிந்து கொள்ளும் ஞானமும் சிறிதும் இல்லாதவனாவேன்; துரும்பினும் அற்பனாகிய என்னை அக்காலத்தே மனமுவந்து ஆண்டு கொண்டாயாதலால், தூயதாகிய நும்முடைய பேரருள் ஞான ஒளியைக் கண்டாலன்றிப் பெறுதற்கரிய உணவு வரினும் யான் அதனை விரும்ப மாட்டேன் இது நும் மேல் ஆணை. எ.று.
கரும்பின்கண் சாறும், கனி வகைகளின் இனிய சுவையும், அவற்றுள் கலந்து நின்று இனிமைச் சுவையைத் தருவது போல இறைவன் உள்ளத்தில் கலந்து இன்பம் செய்தலை விளக்குவாராய், “கரும்பிடை இரதமும் கனியில் இன்சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர்” என இயம்புகின்றார். உமது திருவருளை விரும்பி உமது திருவடிக்கு ஆட்பட்டு நிற்பதொன்றன்றி இதன்மேல் விளைவது யாதாம் என எண்ணினேன் இல்லை; எண்ணுதற்குரிய ஞானமும் இல்லாதவன் எனத் தமது மனநிலையைத் தெரிவிப்பாராய், “விரும்பி நின் பொன்னடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவறிகிலேன் விச்சை ஒன்றில்லேன்” எனக் கூறுகின்றார். இறைவனது திருவருட் பெருமையையும் தமது சிறுமையையும் தம்மை இறைவன் ஆண்டு கொண்ட திறத்தையும் நினைந்து வியந்து கூறுகின்றாராதலால், “துரும்பினும் சிறியனை அன்று உவந்து ஆண்டீர்” என அறிவிக்கின்றார். திருவருள் ஞான மூர்த்தியாதலின் அவரது ஞானக் காட்சியைக் காண்பதிலுள்ள தமது உறைப்பினை எடுத்துரைப்பாராய், “தூய நும் பேரருள் சோதி கண்டல்லால் அரும் பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன் ஆணை நும் மீதே” என உரைக்கின்றார்.
இதனால், திருவருட் காட்சியில் தமக்குள்ள ஆர்வ மிகுதியை வடலூர் வள்ளல் தெரிவித்தவாறாம். (3)
|