3793. தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
உரை: உலகியல் நெறியிற் செல்லாமல் தடுத்துத் திருவருள் ஞான நெறியில் என்னை ஆண்டு கொண்ட தந்தையே; என்னுடைய ஒப்பற்ற பெரிய தலைவனே; ஞான சபையில் நடம் புரிகின்ற பெருமானே; கற்பனையாகச் சிலவற்றைத் தொடுத்து யான் ஒன்றும் சொல்லுகின்றேனில்லை; தூயதாகிய நுமது திருவருள் ஞானத்தின்பால் எனக்கு உளதாகிய அன்பைக் கனவின்கண்ணும் யான் கைவிட்டதில்லை; என்னை நீர் கைவிடின் யான் என் உயிரைத் துறந்துவிடுவேன்; உலகியல் மாயைக்கு அஞ்சும் என் உள்ளத்தில் நிலவும் எண்ணங்கள் எல்லாவற்றையும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கறிந்ததாகும்; திருவருட் காட்சி எய்தும் வரையில் இனி நான் படுக்கையில் படுக்கவும் மாட்டேன்; இது நும் மேல் ஆணை. எ.று.
மண்ணிற் பிறந்த யான் மண்ணியல் வாழ்க்கையில் மயங்கித் தடுமாறும் நிலையில் என்னைத் தடுத்துத் திருவருள் நெறியைத் தலைப்பட்டொழுகுமாறு எனக்கு அருள் புரிந்தாய் எனத் தாம் இறைவனுக்கு ஆட்பட்ட நிலையை விளக்குதற்கு, “தடுத்தெனை ஆட்கொண்ட தந்தையரே” என்று உரைக்கின்றார். என்பால் இல்லாத செயல் வகைகளை உள்ளன போல உரைக்கின்றேனில்லை எனத் தெளிவுபடுத்தற்கு, “தொடுத்தொன்று சொல்கிலேன்” என்றும், உள்ளத்தில் எப்பொழுதும் திருவருள் ஞானத்தின்கண் விருப்பம் கொண்டு ஒழுகும் நிலைமையினை விளக்குதற்கு, “சொப்பனத்தேனும் தூய நும் திருவருள் நேயம் விட்டறியேன்” என்றும் சொல்லுகின்றார். தமது உள்ளத்திடையே எடுத்துரைத்தற்கு, “விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்” என உரைக்கின்றார். வெருவுளம் - அஞ்சும் உள்ளம்; அஃதாவது, மண்ணியல் வாழ்வின் மயக்குந் தன்மை கண்டு அஞ்சும் மனப்பான்மை. மக்கள் மனத்தின்கண் நிகழும் நினைவுகளை அறிவது இறைவன் ஒருவனுக்கே இயலுவதாகலின், “உளக் கருத்தெல்லாம் திருவுளத்து அறிவீர்” என்று கூறுகின்றார். தமது மனவுறுதியைப் புலப்படுத்தற்கு, திருவருட் காட்சியைப் பெறுங் காறும் கண்ணுறங்கேன் என்பாராய், “அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன் நும் மீது ஆணை” என மொழிகின்றார்.
இதனால், திருவருள் ஞானக் காட்சியின்கண் தமக்குள்ள ஆர்வப் பண்பினை வடலூர் வள்ளல் எடுத்துரைத்தவாறாம். (4)
|