3794.

     காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
          காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
     நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
          நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
     ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
          இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
     ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
          அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

உரை:

     திருவருளாகிய பெரிய சோதி உருக் கொண்ட பெருமானே; காசும் பணமுமாகிய பொருட்களையும், மகளிரையும், காணி ஆட்சியையும் நான் விரும்பினதில்லை; அன்புருவாகிய உமது திருவருளின்பால் எனக்கு அன்பொன்று உண்டே தவிர வேறு பொருள்களின் மேல் எனக்கு ஆசையில்லை; இது நீ அறியாததன்று; ஏங்கும் இயல்பை நீக்கி என்பால் வந்து முன்பு என்னை ஆண்டுகொண்டீராதலால், இறைவனே, உம்மை இன்று கண்ணாரக் கண்டன்றி ஆசையுற்றுப் பிறர் எவரோடும் இனிப் பேச மாட்டேன்; இது நும்மேல் ஆணை. எ.று.

     காசு - பொற் காசு. பணம் - வெள்ளிப் பணம். காணியாட்சி - நிலபுலன்கள் உடைமை. இம் மூன்றினையும் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்பதுமுண்டு. இந்த மூவகை ஆசையும் எனக்குச் சிறிதுமில்லை எனத் தெரிவித்தற்கு, “காசையும் பணத்தையும் கன்னியர் தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன்” என விரித்துரைக்கின்றார். நேச - நேசனே என்னும் அண்மை விளியேற்றது. உள்ளத்தில் நேசம் விளைவிக்கும் பொன், பெண், மண், என்ற மூன்றையும் விடுத்த வழி நேசிக்கும் இயல்புடைய உள்ளத்தில் நேசம் நிலவும் திறம் இதுவென விளக்குதற்கு, “நேச நும் திருவருள் நேசம் ஒன்றல்லால் நேசம் மற்றிலை இது நீர் அறியீரோ” என உரைக்கின்றார். ஏசறல் - ஏக்கம்; இது ஏசறவு எனவும் வழங்கும். செயலறுதியைப் புலப்படுத்தும் கையறவு என்பாருமுண்டு; திருவருள் ஞானம் எய்தாமையால் ஏங்கி நின்ற காலத்து இறைவன் திருவருளில் நேசம் உறுவிக்கும் வகையில் இறைவன் தம்மை ஆண்டு கொண்டமை தோற்றுவித்தற்கு, “ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர்” என எடுத்தோதுகின்றார். முன்னமே தாம் இறைவனுக்காட்பட்ட முறைமை கொண்டு இன்று இப்பொழுது தமக்குத் திருவருள் காட்சி வழங்குதல் வேண்டுமென வற்புறுத்துகின்றாராதலால், “உமை இன்று கண்டல்லால் ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்” என இயம்புகின்றார். பேசவும் மாட்டேன் என்ற உம்மையால் பிறரோடு இணங்கவும் மாட்டேன் என்றதாகக் கொள்ளல் வேண்டும்.

     இதனால், இறைவன் திருவருள்பாற் கொண்ட நேசத்தின் இயல்பு தெரிவித்தவாறாம்.

     (5)