3796.

     திருத்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
          சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
     இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
          இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
     வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
          வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
     அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
          அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

உரை:

     திருவருள் ஞானவுருவாகிய பேரொளியையுடைய பெருமானே; திருந்திய என் உள்ளத்தில் நிலவுகின்ற திருக்கோயில் வடலூராகிய ஞான சித்திபுரத்து நினது திருக்கோயில் என்பதை உண்மையாகக் கண்டேன்; அத் திருக்கோயிலுள் எழுந்தருளுகின்ற பெருமானாகிய நீர் அன்றொருநாள் என்னுடைய இரண்டு கண்களும் கண்டு இன்புறுமாறு போந்து, உமது அழகிய திருவுருவைக் காட்டி வருந்துவது ஒழிகவென்று சொல்லி என்னைத் தெளிவித்தது போலவே இன்றும் வள்ளலாகிய உமது திருவரவைக் கண்டாலன்றி அரிய தவத்தையுடைய பெரியவர்கள் என் முன் வந்தாலும் நான் அவர்களை மனம் பொருந்திக் காண மாட்டேன்; இது நும் மேல் ஆணையாகச் சொல்வதாகும். எ.று.

     சிவஞானத்தாலும், சிவன்பால், எளிதாகிய பேரன்பாலும் தமது உள்ளம் தூயதாதலை யுணர்த்த, “திருந்தும் என் உள்ளம்” என்றும், தமது திருந்திய சிந்தையிலிருந்து காட்சி தருவது வடலூர் ஞான சித்திபுரம் என வற்புறுத்தற்கு, “உள்ளத் திருக்கோயில் ஞான சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன்” என்றும் தெரிவிக்கின்றார். சிந்தையில் தோன்றும் சித்திபுரத் திருக்கோயிலுள் அன்றொருநாள் சிவபெருமான் எழுந்தருளிக் காட்சி தந்தருளிய செய்தியையும், அப்பொழுது அப்பெருமான் அவரை நோக்கி “உன்னுடைய மனக் கவலையை ஒழிப்பாயாக” என உரைத்தருளி மகிழ்வுறுத்திய அருட் செயலையும் வியந்து கூறுகின்றாராதலால், “இருந்தருள்கின்ற நீர் என்னிரு கண்கள் இன்புற அன்று வந்து எழிலுருக் காட்டி வருந்தலை என்று எனைத் தேற்றியவாறே” என இயம்புகின்றார். அன்று பெற்ற சிவதரிசனமே இன்றும் பெறல் வேண்டுமெனத் தம் உள்ளத்தெழும் ஆர்வத்தை விளங்க உரைப்பாராய், “வள்ளலே இன்றும் வரவு கண்டல்லால் அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்” என உரைக்கின்றார். தவச் செல்வர்கள் வரின் அவர்கட்கு ஏனை யாவர்க்கும் முற்படச் சிறந்த நிலையில் வரவேற்றல் அறமாயினும், யான் மனமிசைந்து அன்பு பொருந்தி வரவேற்பதை விடுத்து உமது வரவிற்கே தலைமை இடம் தந்து பேணிப் போற்றுவேன் என்பாராய், “அருந்தவம் நேரினும் பொருந்தவும் மாட்டேன்” என்றும், இதனை நும்மீது ஆணையாகச் சொல்லுகின்றேன் என்பார், “ஆணை நும் மீது” என்றும் வலியுறுத்துகின்றார்.

     இதனால், முன்பொருநாள் வடலூர் சித்திபுரத்துச் சிவபெருமானுடைய அருட்காட்சி பெற்ற திறம் தெரிவித்தவாறாம்.

     (7)