3797.

     கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
          கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
     உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
          உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
     வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
          வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
     அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
          அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

உரை:

     அருட் பெருஞ் சோதியுருவாகிய பெருமானே; கரை வகைகள் இல்லாமலே கடல்களை நிலைபெறச் செய்தருளிய நீவிர் கருணையாகிய கடலுக்குக் கரையிலாதவர் ஆவீர்; சொல்லிற் கடங்காத பெருமையை யுடையவராகிய நீவிர், என்னுடைய சொற்களுக்கு அடங்கி உதவிகள் பலவும் செய்து வருகின்றீர்; மலை போன்ற எண்வகைக் குணங்களாகிய பெருஞ் செல்வமாக நீர் இருக்கின்றீர்; உம்முடைய வாய்மை நிறைந்த அருள் வரவைக் கண்டாலல்லது அரைக்கண நேரமாயினும் உயிர் தாங்கி யிருக்க மாட்டேன்; இது நும் மேல் ஆணையாகச் சொல்வதாகும். எ.று.

     சிறிய நீர் நிலையாயினும் உலகியல் மக்கள் அதற்குப் பலவகையான கரைகளை யிட்டு நிலைபெறச் செய்வது வழக்கு. அளப்பரிய பெரிய நீர் நிலையாகிய கடலுக்குக் கரை கிடையாது; கரை யின்றியே அதனை நிலை பெறச் செய்யும் இறைவனுடைய திருவருளை வியந்து பேசுதலின், “கரைக்கண மின்றியே கடல் நிலை செய்தீர்” என எடுத்து மொழிகின்றார். அவ்வியல்பால் உம்முடைய கருணையாகிய கடலுக்கும் கரையாகிய அணை யிடுவதில்லை என்றற்கு, “கருணைக் கடற்குக் கரைக்கணம் செய்யீர் என மொழிகின்றார். மலைகளும் குன்றுகளுமாகிய இயற்கை அணைகளையும், மலை போல் உயர்வுற அமைத்த செயற்கைக் கரைகளையும் மக்கள் நீர் நிலைகட்குக் கரைகளாக அமைப்பது பற்றி, “கரைக்கணம் இன்றிக் கடல் நிலை செய்தீர்” எனக் கட்டுரைக்கின்றார். இறைவனுடைய பெருமை எத்துணை உயர்ந்தோராலும் அளவிட்டு உரைக்க முடியாததாகலின், “உரைக்கணவாத உயர்வு உடையீர்” என்றும், எனினும் என்னுடைய உரைகளை விரும்பி யேற்று இனிய உலகியல் வாழ்க்கைக்கும் ஞான வாழ்க்கைக்கும் ஏற்பன பலவற்றையும் உதவுகின்றீர் எனப் போற்றுகின்றாராதலின், “என் உரைக்கு அணவிப் பல உதவி செய்கின்றீர்” என உரைக்கின்றார். அணவுதல் - விரும்பி ஏற்று அடங்குதல். குணங்களின் சலியா இயல்பு பற்றி அவற்றை மலைகளாய் உவமித்துக் “குணக் குன்றம்” என்று சான்றோர் பாராட்டும் மரபு பற்றி, “வரைக் கண எண்குணம்” எனவும், அக் குணங்களையே பெருஞ் செல்வமாகப் போற்றி, “எண் குண மாநிதி ஆனீர்” எனவும் பாராட்டுகின்றார். குறித்தது தவறாத நல்லியல்பு விளங்க, “வாய்மையில் குறித்த நும் வரவு என்று புகல்கின்றார்.

     இதனால், சிவபெருமானுடைய திருவருள் வரவை வடலூர் வள்ளல் மிக்க பெரும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றமை கூறியவாறாம்.

     (8)