32. பிரியேன் என்றல்

    அஃதாவது, இறைவனுடைய திருவருள் இன்ப ஞான வாழ்வு பெற்றாலன்றி உமது திருமுன் நின்று நீங்கேன் என முறையிடுவதாம். மண்ணியல் வாழ்வின் குறிக்கோள் திருவருள் ஞானப் பேரின்பப் பெருவாழ்வு பெறற்கு உரித்ததாகலின், அது தமக்கு எய்துங்காறும் விடாப்பிடியாய் இருக்கும் தமது மனக் கொள்கையை இப் பகுதியில் பாட்டுத் தோறும் விரித்துரைக்கின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3800.

     அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
          அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
     இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
          எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
     தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
          தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
     துப்பாக்கித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
          சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.

உரை:

     தயவாகிய அருட் செல்வத்தை உடையவனே; உலகில் யாவர்க்கும் நுகர் பொருளாகியும் துணைவனாகியும் விளங்குகின்ற மெய்யான் துணைவனே; சுத்த சிவானந்தத்தை நல்கும் அருட்சோதி உருக் கொண்டு அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே; அப்பனே; உன் திருமுன் அடியவனாகிய நான் பலகாலும் பலவற்றைப் பல வகையால் எடுத்துரைப்பது என்னை? என்னுடைய அச்சங்களைப் போக்கித் துன்பங்கள் எல்லாவற்றையும் ஒழித்து இத்தருணத்தில் இவ்வுலகில் விரைந்து மகிழ்ச்சியுடன் என்பால் வந்தருளி என்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றி என்னை உனது அருள் நெறியில் ஏற்றுக் கொள்ளாயானால் யான் தவறாமல் என் உயிரை விட்டுவிடுவேன்; இது சத்தியம்; இதனை உன் திருவடிகள் அறிந்து கொள்ளட்டும். எ.று.

     அருளே சிவனுக்குத் திருமேனியும் உடைமையும் செல்வமுமாதல் பற்றி, “தயவுடையோய்” என்று எடுத்து மொழிகின்றார். தன்னை அடைந்தவர் எத்திறத்தாராயினும் அவர்கட்கு ஞானாமுதம் ஆகியும் ஞானத் துணையாகியும் நீங்காது விளங்குகின்ற சிவபெருமானுடைய செம்மை நிலையை விளக்குதற்கு, “எவர்க்கும் துப்பாகித் துணையாகித் துலங்கிய மெய்த்துணையே” என்று உரைக்கின்றார். சிவன்பால் பெறப்படுகின்ற சிவயோக யோகானுபவத்தைச் “சுத்த சிவானந்தம்” என்றும், அதனை அருள் ஒளி கொண்டு அம்பலத்தில் நிகழ்த்துகின்ற ஆடல் நல்கும் இயல்புடைத்தாதல் பற்றி, “சுத்த சிவானந்த அருட் சோதி நடத்தரசே” என்றும் புகல்கின்றார். எக்காலத்தும் எப்போதும் உலகியலில் தாம் பெறுகின்ற அச்சங்களையும் துன்பங்களையும் எடுத்தோதிய வண்ணமிருத்தலால், “அப்பா நான் பற்பலகால் அறைவது என்னே” என்று முற்பட மொழிகின்றார். இறைவன் திருவருள் ஞானம் எய்துதற்கு உலகியல் வாழ்வில் உண்டாகும் அச்சங்களும் அவலங்களும் தடையாக நிற்பது கண்டு, “அடியேன் அச்சமெலாம் துன்பமெலாம் அறுத்து” எனவும், மீளவும் வந்து தாக்காமை கருதி “விரைந்து வந்து பாரில் இது தருணம் என்னை அடைந்தருளுக” எனவும், அவ்வருளால் சிவஞானப் பேறு குறித்து யான் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாவற்றையும் நிறைவித்துத் தம்மைத் திருவருளில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டுவாராய், “இப் பாரில் இது தருணம் என்னை அடைந்தருளி எண்ணமெலாம் முடித்து என்னை ஏன்றுகொள்வாய்” எனவும் முறையிடுகின்றார். தம்மை ஏலா தொழியின் தாம் இறந்துபடுவது மெய்யாம் என வற்புறுத்தற்கு, “தப்பாமல் உயிர் விடுவேன் சத்தியம் சத்தியம்” என்றும், இதனைத் தானும் நும்முடைய திருவடிகள் அறியச் செப்புகின்றேன் என்பார், “நின் தாள் இணைகள் அறிக இது” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், உலகியல் வாழ்வில் உளவாகும் அச்சம் அவலம் ஆகியவற்றைப் போக்கி எண்ணியவற்றை எண்ணியாங்கு எய்துவித்து என்னை நின் திருவருட் சூழலில் சேர்த்துக்கொள்க என விண்ணப்பித்தவாறாம்.

     (1)