3802. படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீ எடுத்துக் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராச மணியே.
உரை: வடலூரில்கண் உள்ள திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் பெருமானே; என் கண்ணின்கண் உள்ள மணி போல்பவனே; குருமணியே; மாணிக்க மணி போல்பவனே; நடன சிகாமணியே; நவமணியே; ஞானமாகிய நல்ல மணியே; அழகிய மணி போல்பவனே; நடராசனாகிய சிவமணியே; உலகியல் நல்கும் துன்பத்தை யான் இனிமேல் படமுடியாது; அருளரசே! இதுகாறும் நான் பட்ட துன்பங்கள் போதும்; துன்பம் வந்து தாக்குமென்று இந்த அச்சத்தைப் போக்கி இப்பொழுதே என் உடல் உயிர் முதலிய எல்லாவற்றையும் நீ எடுத்துக்கொண்டு உன்னுடைய உடல் உயிர் முதலிய அனைத்தையும் மனமுவந்து எனக்கு அளித்தருள வேண்டும். எ.று.
வடலூர் என்ற பார்வதிபுரத்தின்கண் அமைந்துள்ள சிற்றம்பலத்தை “வடலுறு சிற்றம்பலம்” என்றும், அங்கே கோயில் கொண்டருளும் கூத்தப் பெருமானை, “சிற்றம்பலத்தே வாழ்வாய்” என்றும் முன்னிலைப் படுத்துகின்றார். அப் பெருமான்பால் கொண்ட பேரன்பால் அவனை “என் கண்ணுள் மணியே” என்று பாராட்டுகின்றார். ஞானம் வழங்குதல் பற்றி “குருமணியே” என்றும், ஒளிமிக்க சிவந்த திருமேனி உடைமை பற்றி, “மாணிக்க மணியே” என்றும், கூத்தப் பெருமானாதலால், “நடன சிகாமணியே” என்றும், புதிய புதிய ஞான விளக்கம் தருவது கொண்டு “நவமணியே” என்றும், ஞான மயமாய் விளங்குதல் பற்றி, “ஞான நன்மணியே” என்றும் திருவுருக் காட்சியைச் சிறப்பித்து, “பொன் மணியே” என்றும், “நடராச மணியே” என்றும் போற்றுகின்றார். உலகியல் துன்பத்தை நினைந்து ஆற்றாமை மிக்குற்றமை புலப்பட, “இனித் துயரம் படமுடியாது படமுடியாது” என்று பகர்கின்றார். இதுகாறும் பட்ட துயரங்கள் அத்தனையும் போதும் இனி வேண்டா என்றற்கு, “பட்ட தெல்லாம் போதும்” என்று கூறுகின்றார். பட்ட துன்பங்கள் மேலும் வந்து தாக்குமோ என்ற அச்சம் நெஞ்சில் நிலவிய வண்ணமிருத்தலால் அதனை உடனே போக்கி யருளுக என வேண்டுவாராய், “இப்பொழுது இந்தப் பயம் தீர்த்து” எனவும், அச்ச வுணர்வுகளால் அவலமுற்று மெலியும் என்னுடைய உடல் உயிர் முதலிய பசு கரணங்கள் எல்லவாற்றையும் நீ எடுத்துக்கொண்டு, அச்ச வகைகளால் தாக்கப்படாத உன்னுடைய உடல் உயிர் முதலிய பதி கரணங்களை மனமுவந்து எனக்கு அளித்தருளுக; அதனால் இவ்வுலகியல் துனபங்கள் தாக்கப்படாது இனிது உறைவேன் என்பாராய், “என் உடல் உயிர் ஆதியவெல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிராதியவெல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்” எனவும் வேண்டுகின்றார். வடல் - வடலூரின் மரூஉ வழக்கு. அழகிய கோயில் கொண்டிருத்தலின் “சிற்றம்பலத்தே வாழ்வாய்” என்று சிறப்பிக்கின்றார். “என் கண்ணுள் மணியே, என் குருமணியே” என்பது முதலாக வருவன வள்ளற் பெருமானுடைய அன்பு மிகுதியைப் புலப்படுத்தும் ஆர்வ மொழிகளாகும்.
இதனால், தன்னுடைய பசு கரணங்கள் யாவும் பதி கரணங்களாக மாற்றியருளுக என விண்ணப்பித்தவாறாம். (3)
|