3803. வாழைஅடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
உரை: பெருமானே; வாழையடி வாழை போல உன்னுடைய அடியார்களின் திருக்கூட்டத் தொகுதியுள் யானும் ஒருவன் ஆவேனன்றோ; அவர் வகையுள் யான் எவ்வகையைச் சேர்ந்தவனோ அறிகிலேன்; ஏழையாகிய நான் படும் துன்பம் உன்னுடைய அருள் நிறைந்த திருவுள்ளத்திற்கு இசைந்தது தானோ? நான் துன்பப்படும் இது ஆண்டவனாகிய உனக்குத் தக்கதாகுமோ? முறையாகுமோ? ஆண்டவனாகிய உனக்கு நான் படும் துன்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது தர்மமாகுமா? மணி யிழைத்த பொன்னம்பலத்தில் திருநடம் புரிகின்ற வள்ளலாகிய உனக்கு யான் மகனல்லவா; நீ எனக்கு ஏற்ற தந்தை யல்லவா; வன்மை யில்லாத உலகில் வாழும் உயிர்களுக்கு எய்துகின்ற துன்பத்தை இனியும் நான் பொறுத்திருக்க முடியாது; ஆதலால், என் உயிர்க்கு உறுதி உண்டாகும் வண்ணம் நின்னுடைய அருள் ஞான ஒளியைக் கொடுத்தருள்க; அதனையும் இப்பொழுதே கொடுத்தருள வேண்டுகிறேன். எ.று.
கனி யீந்த வாழை மடியவும், அதன் அடியில் கிளைத்துத் தோன்றுகின்ற வாழை வளர்ந்து கனி நல்குவதும், அதன்பின் அதனடியில் கன்று தோன்றி முன்னையது போலக் கனி தருவதும் இயல்பாம். அதுபோல, அடியார்களும் வழி வழியாகத் தோன்றுவது மரபு. அவ்வடியார்களைப் போல யானும் தோன்றி யுள்ளேன் என்பார், “வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ” என உரைக்கின்றார். அடியார்களின் தொண்டு வகை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், நேச மார்க்கம், ஞான மார்க்கம் என நால்வகைப்படுதலின், தாம் மேற் கொண்டிருக்கும் மார்க்கம் இத்தகையது என உணர்ந்துரைக்க மாட்டாராய், “வகை யறியேன்” என மொழிகின்றார். சிவஞான மில்லாதவன் எனத் தமது பணிவு தோன்றக் கூறுவார், “இந்த ஏழை” எனத் தம்மைக் கூறுகின்றார். சிவ பரம் பொருளாகிய உமக்குத் தொண்டு பட்ட அடியவனாகிய யான் துன்புறுவது உன்னுடைய அருட் பெருமைக்கு ஒத்ததாகாது என்றும், உமது திருவடியே பற்றி நிற்கும் யான் துன்புறுவதும், யான் துன்புறுவதை நீ கண்டிருப்பதும் தேவரீரது நிலைமைக்கும் தகுதிக்கும் முறைமையும் தருமமும் ஆகாது என்பாராய், “உனக்குத் திருவுளச் சம்மதமோ, இது தகுமோ, இது முறையோ, இது தருமந் தானோ” எனக் கூறுகின்றார். மாழை மணிப் பொது - பொன்னும் மணியும் கொண்டு அமைத்த பொன்னம்பலம். மாழை - பொன். தமக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பு கூறுவார், “யான் உனக்கு மகனலனோ, நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ” என்று மொழிகின்றார். உறுவது கூறி வேண்டுவது வேண்டிப் பெறுவது மகனுக்குள்ள முறையாதலின், “யான் உனக்கு மகனலனோ” எனவும், செய்வதறியாது சிந்தை தியங்குமிடத்து நல் ஞானம் வழங்கி நன்னெறியில் உய்த்தலின், “நீ எனக்கு வாய்த்ததந்தை அலையோ” என்று விளக்கி, உலகியல் வாழ்வால் தம் உயிர்க்குளதாகும் துன்ப மிகுதியைப் பொறுத் தாற்றும் மதுகை தம்பால் இல்லாமை புலப்படுத்தற்கு, “கோழை யுலகுயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்” எனவும், எத்தகைய துன்பங்கள் வந்து தாக்கினும் பொறுத் துய்தற்கு ஏற்ற உடல் வன்மையும், ஞானத் திண்மையும் உண்டாக்குவது திருவருள் ஞான ஒளியாதலின், அதனை இப்பொழுதே கொடுத் தருள்க என விண்ணப்பிக்கின்றாராதலால், “கொடுத்தருள் நின்னருள் ஒளியை” எனவும், “கொடுத்தருள் இப்பொழுதே” எனவும் குறித்துரைக்கின்றார். கோழை உலகுயிர் - கோழைத் தன்மையையுடைய உலகத் துயிர்கள். துன்பங்களைப் பொறுத் தாற்றும் வன்மை யில்லாதவையாதலின் உலகுயிர்களை, “கோழை உயிர்” என்று கூறுகின்றார். கோழைமை - மனத்திண்மையில்லாமை.
இதனால், உலகுயிர்களின் கோழைமைத் தன்மையை எடுத்தோதி அதனைப் போக்குதற்குரிய அருளொளியை நல்குமாறு வேண்டியவாறு. (4)
|