3805.

     முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
          முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்த்திங் கிருந்தேன்
     இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
          எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
     அன்னையிலும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
          ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
     என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
          என்உயிர்க்குப் பெருந்துணையே என்உயிர்நா யகனே.

உரை:

     என்னுடைய இரண்டு கண்களிலும் ஒளிரும் மணி போல்பவனே; என்னுடைய அறிவே; என்னுடைய அன்பே; என் உயிர்க்குப் பெரிய துணையாகும் பெருமானே; என் உயிர்க்கு நாயகனே; முன்பொரு நாள் நான் அறிவு மயங்கி யிருந்த காலை என் முன் குருபரனாய் நின்னுடைய திருவுருவைக் காட்டி “நீ மயங்குதல் ஒழிக” என எனக்கு அறிவுரை வழங்கினாய்; நானும் முகம் மலர்ந்து இங்கே இருப்பேனாயினேன்; ஆயினும் நீ மீளவும் இன்னும் என்பால் வரக் கண்டிலேன்; நின்னுடைய அருள் வரவை எதிர்நோக்கி நின்னையே எண்ணி எண்ணி வருந்துகின்றேன்; ஐயோ, நான் இனி யாது செய்வேன்; பெற்ற தாயினும் மிக்க பெரும் அருளுடையவனே; நின் திருவருளை நினைத்தே என்னுடைய அருமையான உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்; இது உன் மேல் ஆணையாகச் சொல்வது காண். எ.று.

     கண்ணிரண்டிற்கும் ஒளி தந்து விளக்கம் செய்வது கருமணியாதலின் அதனைச் சிறப்பித்து, “என்னிரு கண்மணியே” என எடுத்து உவமம் செய்து பாராட்டுகின்றார். உயிர்க்கு அறிவு நல்குபவனும், அன்பின் உருவாகியவனும் இறைவனாதலால் அவனை, “என் அறிவே என் அன்பே” என்று போற்றுகின்றார். அறிவுருவாகிய உயிர்க்கு விளக்கம் தருவது குறித்து, அது புகும் உடம்புதோறும் தானும் புகுந்து பிரிவரிய துணையாய் நின்று பெருந் துணை புரிவதால் சிவபெருமானை “என் உயிர்க்குப் பெருந் துணையே” என்றும், உயிரினுடைய அறிவு, இச்சைச் செயல்கள் செயல்படுதற்குத் தலைவனாய் நின்று இயக்குதல் பற்றி, “என் உயிர் நாயகனே” என்றும் பராவுகின்றார். முக்குண வயத்தால் உடலுள் இயங்கும் உயிர், ஓரொருகால் மயங்குவதும் இறையருளால் தெளிவுறுவதும் உயிர்க் கியல்பாதலின், “முன்னொருநாள் மயங்கினன்” என்றும், பெருமயக்கத்தால் உயிரறிவு தெளிவு எய்தாது மயங்குமிடத்து இறைவன் உலகியல் மக்களைப் போல் உருக்கொண்டு போந்து தெளிவுரை நல்கி மயக்கறுத்த செயல் விளங்க, “நீ மயங்கேல் என்று எனக்கு முன் நின் உருக்காட்டினை” என்றும், அத்தெளிவால் நானும் மனமும் முகமும் மலர்ந்து இவ்வுலகில் இன்புற்றிருந்தேன் என்பாராய், “நான் முகமலர்ந்து இங்கிருந்தேன்” என்றும் மொழிகின்றார். முன் போலவே இப்பொழுதும் நீ எழுந்தருளி என் மனமயக்கத்தை நீக்க வருவாய் என்று கருதியிருந்த என் முன் நீ இன்னும் வரக் காண்கிலேன் என்றும், அதனால் நான் நினது நினைவே கொண்டு வருந்தி மெலிகின்றேன் என்றும் கூறுவாராய், “இன்னும் வரக் காணேன், நின் வரவை எதிர்பார்த்தே எண்ணி எண்ணி வருந்துகின்றேன்” எனவும், நீ இருக்குமிடம் அறிந்து நின்னை என்பால் வருவித்துக் கொள்ளுதல் என் அளவிற்கு அப்பாற் பட்டதாதலின் செய்வகை யறியாது தியங்குகிறேன் என்றற்கு, “அந்தோ என்ன செய்வேன்” எனவும் உரைத்து அலமருகின்றார். பெற்ற தாயினும் பேரருள் உடையவனாதலின் நீ அருள் கூர்ந்து என்பாற் போந்து அருள் புரியத் தவறாய் என்று நினைத்து இப்பொழுதும் என் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்; இது உன் மேல் ஆணை என்பாராய், “அன்னையினும் தயவுடையாய் நின் தயவை நினைத்தே ஆருயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய்” என்று முறையிடுகின்றார். நீங்கினால் மீளப் பெறலரிது என்பது பற்றி உயிரை, “ஆருயிர்” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், இறைவன் திருவருளை நினைந்தே தான் உயிர் தாங்கியிருக்கின்ற நிலையை வடலூர் வள்ளலார் தெரிவிக்கின்றார்.  

     (6)