3806.

     உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
          உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
     என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
          என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
     அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
          அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
     இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
          இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.

உரை:

     பெருமானே! உன்னை நான் மறக்க வல்லனோ? உன்னை மறக்கும் திறத்தை நான் அறியேன்; ஒருகால் மறக்க நேர்ந்தால் நான் என் உயிரை ஒரு கணநேரமும் இருக்க விடாமல் துறந் தொழிவேன்; இது உன்மேல் ஆணையாக உரைப்பதாம்; ஒருகால் நீ என்னை மறந்து போவாயோ; மறப்பாயாயின் யான் யாது செய்வேன்; எங்கே போவேன்; எவரிடத்து இதனை எடுத்துரைப்பேன்; பெற்ற தாயினும் பேரருளுடைய நீ மறந்தாய் என்றாலும், உலக மெல்லாவற்றையும் படைத்தளிக்கும் நின்னுடைய திருவருள் என்றும் மறவாத இயல்புடையது என்று கருதி நான் இன்னும் உலகில் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன்; ஆதலால், என்னை நீ மறவற்க; இது நல்ல சமயமாதலின் நின் திருவருள் இன்ப ஒளியை விரைந்து எனக்கு அருளுவாயாக. எ.று.

     உன்னை எப்பொழுதும் மறப்பதில்லாதவனாகிய யான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன்; ஒருகால் குண மயக்கத்தால் மறப்பேனாயின் ஒருசிறு கணமும் நான் உயிர் தாங்கி யிருக்க மாட்டேன்; யான் உரைக்கும் இது உன்மேல் ஆணையாக உரைப்பதாகும் என்பார், “உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர் விடுவேன்; கணந் தரியேன் உன் ஆணை இது” என்று இயம்புகின்றார். இறைவன் குணாதீதனாய் நினைப்பு மறப்புகட்கு உள்ளாகுபவ னல்லனாதலால், “நீ என்னை மறந்திடுவாயோ” என்று உரைக்கின்றார். மறதி நினைவுகட்கு இரையாகும் மக்கள் உடம்பிலிருந்து பேசுவதால் வடலூர் வள்ளல், “மறந்திடுவாய் எனில்” என்று மொழிகின்றார். எனில் என்பதனால் ஒருகாலும் மறவாமை வலியுறுத்தப்படுகிறதாம். இறைவன் மறந்திடுவானாயின் விளைவு இதுவென விளக்குவார், “யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்” என்று இயம்புகின்றார். இறைவனை மறப்பித்தலும் நினைப்பித்தலும் மக்கட் செயற்கு அப்பாற்பட்டதாதலின், “என்ன செய்வேன்” எனவும், “எங்கு உறுவேன்” எனவும், “எவர்க்குரைப்பேன்” எனவும் ஏங்கி யுரைக்கின்றார். இவ்வாறே மணிவாசகரும் ஏங்கிய நிலையில் “ஆண்ட நீ அருளிலையானால் யாரொடு நோகேன் யார்க்கு எடுத்துரைப்பேன்” (வாழா) என உரைக்கின்றமை காண்க. மக்களில் தாயினும் சிறந்த தயவுடையவர் வேறு யாரும் இல்லாமையால் “அன்னையினும் தயவுடையாய்” என்று சிவனைப் புகழுகின்றார். மக்களைப் போல நீ ஒருகால் மறந்தாயானாலும் அருளே திருவுருவாகிய உமது உள்ளம் ஒருபோதும் மறவாது என வற்புறுத்துவாராய், “நீ மறந்தாய் எனினும் அகிலமெலாம் அளித்திடும் நின் அருள் மறவாது” என்ற உண்மையை வெளிப்பட வலியுறுத்துகின்றார். அத்திருவருள் உண்மையே பற்றுக் கோடாகக் கொண்டு நான் உயிரோடு மகிழ்ந்திருக்கின்றேன் என்றும், நீ என்னை மறத்தல் கூடாது என்றும் விண்ணப்பிக்கின்றாராதலால், “இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன்” எனவும் “மறவேல்” எனவும் மொழிகின்றார். மறவாமல் தமக்கு அருள வேண்டுவது இதுவென விளக்குகின்றாராதலின், “இது தருணம் அருட்சோதி எனக்கு விரைந்து அருளே” என்று வேண்டுகின்றார்.

     இதனால், தமக்கு அருள் ஞான விளக்கத்தைத் தந்தருள வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (7)