3807.

     நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
          நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
     வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
          மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
     ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
          உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
     பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
          பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.

உரை:

     நான் மறந்தேனாயினும் என்னுடைய நாயகனாகிய சிவபெருமான் என்னை மறக்க மாட்டான் என்ற எண்ணத்தால் மகிழ்ந்திருக்கின்றேன்; எனினும் இது பொழுது வரையும் வானுலகத்தையும் அங்குள்ள வானவர்களையும் மறந் தொழிந்தேன்; அவர்கட்கு மேலுள்ள தேவர்களாகிய திருமாலையும் பிரமனையும் மறந் தொழிந்தேன்; அவரோடு நம்முடைய சிவபெருமானுக்குரிய உருத்திர தேவர்களையும் மறந்திருந்தேன்; இவ்வுலகில் என்னுடைய உடம்பையும் உயிரையும் உணர்வுகளையும் மறந்ததோடு உலகம் எல்லாவற்றையுமே மறந்திருந்தேன் என்றாலும், இங்கு யான் சிவபரம்பொருளாகிய உன்னை மறந்ததில்லையாதலால், பால் மறந்த தன் குழந்தையைத் தாய் பார்ப்பதைப் போல என்னைப் பார்ப்பதின்றி என்பால் பரிவு கொண்டு திருவருள் ஞான ஒளியாகிய அருட்சோதியை எனக்கு விருப்பத்துடன் மகிழ்ந்து தந்தருள வேண்டுகிறேன். எ.று.

     நினைப்பு மறுப்புக்களாகிய குற்றங்கட்கு இடமாகிய உடம்பொடு கூடி இருக்கின்றேனாதலால் நான் சிவனை மறப்பது இயல்பு என்பாராய், “நான் மறந்தேன்” என்றும், அத்தகைய குற்றங்கட்கு இடமின்றிக் குணமே உருவாகிய பெருமான் என்னை ஒருகாலும் மறவான் என்ற எண்ணத்தால் நான் மகிழ்ந்து கிளர்ச்சியுடன் இருக்கின்றேன் என்பாராய், “நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன்” என்றும் உரைக்கின்றார். மறதியாகிய குற்றமுடையவனாதலால் மேலுலக வாழ்வாகிய தேவருலக வாழ்வையும் அங்கு வாழ்கின்ற தேவர்களையும் அவர்களுக்கு மேலான வாழ்வையுடைய திருமால், பிரமன் முதலியோருடைய வாழ்வையும், உருத்திர மூர்த்திகளின் வாழ்வையும் மறந் தொழிந்தேன் என்பார், “இதுவரையும் வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மாலயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன்” என்று மொழிகின்றார். மண்ணுலகத்தில் மக்களிடத்தில் வாழ்ந்தேனாகினும் என் உடலையும், உயிரையும், உணர்ச்சிகளையும், ஏனை உலக போகங்களையும் யான் மறந்ததுண்டு; ஆயினும், உன்னை மறந்ததில்லை என வற்புறுத்தற்கு, “என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகமெலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்தறியேன்” என இசைக்கின்றார். தனக்கு வேண்டிய உணவைப் பால் உண்பதை விடுத்த குழவி, பெற்ற தாயைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதால், பெற்ற தாய் பாலுண்ணும் குழவிபால் கொள்ளும் அன்பு வேறுபடுவது போல என்பால், பராமுகம் கொள்ளலாகாது என வேண்டுகின்றாராதலால், “பால் மறந்த குழவியைப் போல் எனைப் பாரேல்” எனவும், இங்கு என்பால் பரிவு கொண்டு நினது திருவருள் ஒளியாகிய ஞானத்தை நல்கி யருளுக என விண்ணப்பிப்பாராய், “பரிந்து நினது அருட் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே” எனவும் வேண்டுகின்றார்.

     இதனால், மறதியாகிய குற்றமுடையேனாயினும் என்பால் பரிவு கொண்டு திருவருள் ஒளியாகிய ஞானப் பொருளை நல்கி யருளுக என விண்ணப்பித்தவாறாம்.

     (8)