3808. தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
உரை: சிறு பருவத்தே தெருவின்கண் அங்குமிங்கும் ஓடி விளையாடித் திரிந்த என்னை வலிந்து அழைத்துச் சிவமாலை அணிந்து சிறப்பித்தாய்; அச்சிறு வயதில் இருந்த என்னுடைய உடலுருவின்கண் பரம் பொருளாகிய உனக்கிருந்த அன்பெல்லாம் இப்பொழுது நீங்கி விட்டதோ அன்றிப் புதிய ஓர் உடம்பின் உருவின்கண் அந்த அன்பு சென்று விட்டதோ அறிகிலேன்; கருவிலேயே என்பால் அருள் கொண்டு காத்தருளிய என் உயிர்க் காவலனாகிய உன்னுடைய திருவடியைப் பிடித்துக் கொண்டேன்; இனி அதனை விடமாட்டேன்; நான் பிடித்தது என் கைப்பிடி யன்று; அதுதானும் அச்ச நிலையில் பற்றிக் கொண்ட உயிர்ப் பிடியாகும்; அது என் உயிர் அகன்றாலன்றி விடமாட்டாத வன்மை யுடையது காண். எ.று.
சிறு பருவத்தில் மக்கள் ஓடி விளையாடுதலும் உண்டு உறங்குதலுமன்றி வேறு செயலுடையன வல்லவாதலின், “தெருவிடத்தே விளையாடித் திரிந்த என்னை” என்றும், அலைந்து திரியும் மனத்தையுடைய தன்னைப் பற்றி யீர்த்து அங்கிருத்தி, அக்க மாலை அணிந்து மகிழ்வித்த அருட் செயலை நினைந்து கூறுகின்றாராதலால், “எனை வலிந்து சிவமாலை அணிந்தனை” என்றும் இயம்புகின்றார். சிவமாலை அணிந்து தம்மைச் சிறப்பித்ததற்குக் காரணம் சிறுவயதில் தமது திருமேனி உருவத்தில் இறைவனுக் குளதாகிய அன்பு என எண்ணுகின்றாராதலால், “அச்சிறு வயதில் இந்த உருவிடத்தே நினக்கிருந்த ஆசை” என்றும், அந்த அன்பு இப்பொழுது இல்லை போலும் எனக் கூறலுற்று, “ஆசை எலாம் இந்நாள் ஓடியதோ” என்றும், ஆசை நீங்கியதற்குக் காரணம் வேறு ஒருவர் மேல் உனது அன்பு சென்றொழிந்தது போலும் என்பாராய், “புதிய ஒரு உருவு விழைந்ததுவோ” என்றும் எடுத்துரைக்கின்றார். புதுமை நாடுவது மக்களுயிர்க் கியல்பாதலால் அவ்வியல்பு நின்னிடத்தும் உளது போலும் என்பது கருத்து. இளமைப் பருவத்தேயே தமக்கு இறைவன் திருவருள் கிடைத்த திறத்தை விளக்குதற்கு, “கருவிடத்தே எனைக் காத்த காவலனே” என்று குறிக்கின்றார். பிறிதோரிடத்தும் இக் குறிப்பே தோன்ற “ஆடையிலே எனை மணந்த மணவாளா” (அருள் விளக்க) என்று வடலூர் வள்ளல் கூறுவது காண்க. இறைவன் திருவடிக்கண் தமக்குளதாகிய விடாப் பிடியை விளக்குதற்கு, “உனது கால் பிடித்தேன் விடுவேனோ” என்றும், “கைப்பிடி யன்று அதுதான் வெருவிடத்து என் உயிர்ப்பிடி காண்” என்றும் இயம்புகின்றார். அச்சம் தோன்றிய பொழுது பற்றப்படும் பிடிப்பு எளிதில் விடப்படும் மென்மையுடையதன்று. ஆதலால் அதனை “வெருவிடத்து என் உயிர்ப்பிடி காண்” என்று உரைக்கின்றார். நீர் நிலைக்குள் வீழ்ந்து கரையேற மாட்டாது அஞ்சி அலமரும் ஒருவன் தன் உயிர்ப் பொருட்டுத் தன்னால் பற்றிய பொருளை விடாது உழலும் பிடி “உயிர்ப் பிடி” எனப்படும். பிடி நெகிழும் திறத்தை, “உயிர் அகன்றால் அன்றி விட மாட்டேன் விட மாட்டேன் விட மாட்டேன் நானே” என விளக்குகின்றார்.
இதனால், தாம் இறைவன் திருவடியைப் பற்றி யிருக்கும் பிடிப்பு உயிர்ப்பிடிப்பு எனத் தெரிவித்தவாறாம். (9)
|